html dir="ltr">
இந்தியர்கள் என்று நம்மை அடையாளம் காட்டுவது எது ? நம்முடைய பாரம்பரியமா ? சமயமா ? என்றால் கிடையாது. நம்முடைய தினப்படி நடவடிக்ககைகள் தான் நம்மை இந்தியர்கள் என்று அடையாளம் காட்டுகிறது. சிலவற்றை பார்க்கலாம்.
நம்முடைய பல நடவடிக்கைகள் conserve and recycle முறையினாலானது. சிக்கனமாக இருப்பதை பெருமையாக நினைத்துக்கொள்கிறோம். நம்முடைய உபதேசங்கள், பாடல்கள் பலவற்றில் நம்முடைய ஆசைகளை விட்டுவிட உபதேசிக்கின்றன(உத: பஜகோவிந்தம்-2 பாடல்). நாம் மகிழ்ச்சியையும் செலவையும் போட்டுக் குழப்பிக்கொள்கிறோம்.
இதற்கு பல உதாரணங்கள் கூறலாம். பழைய துணி, பாத்திரங்களை விற்று புது பாத்திரங்களை வாங்குகிறோம். காலி டப்பாகளில் ரோஜா வளர்க்கிறோம். எப்பாவாது உபயோகப்படும் என்று பரணில் குப்பைகளை அடைத்து வைக்கிறோம். பெப்ஸி குடித்துவிட்டு அந்த பாட்டிலை வாட்டர் பாட்டிலாக உபயோகிக்கிறோம். செல் போன் மீட்டர் ஏறாமல் இருக்க உங்கள் நண்பருக்கு "மிஸ்ட் கால்" குடுக்கிறீர்கள்.
புதிய பூப்போட்ட டிசைன் சோஃபா செட்டை வாங்கியவுடன், அழுக்காகாமல் இருக்க ஒரு துணியை போட்டு முடி விடுகிறோம். அது அழுக்காமல் இருக்க அதன் மேல் உட்காராமல் பாயில் உட்காருகிறோம்.
படிப்பு நமக்கு ரொம்ப முக்கியம். அது நமக்கு ஒரு பாஸ்போர்ட் போல். நம்முடைய பெயர் பலகையில் பெயருக்கு பின்னால் நாம் என்ன படித்தோம் என்பதை போட்டுக்கொள்வோம். டிப்ளமோ, பக்கத்து தெரு இன்ஸ்டிட்யுடில் கொடுத்த டிகிரி என்று எதையும் விட்டுவைப்பதில்லை. தற்போது எந்த படிப்பு மார்க்கெட்டில் முதலாவது இருக்கிறதோ அதற்கு மதிப்பு கொடுக்கிறோம். பெண்ணுக்கு US மாப்பிள்ளையை பார்க்கிறோம். USக்கு போனவுடன் அதை பல பேரிடம் சொல்லி மகிழ்கிறோம்.
நம்முடைய பிள்ளைகள் ஆங்கிலம் பேசுவதை பெருமையாக நினைக்கிறோம். அமெரிக்கா போனவுடன் தான் தமிழ் பற்று வருகிறது. பக்கத்து வீட்டுக்காரர் தன் பிள்ளைகளை டான்ஸ் கிளாசில் சேர்த்திருக்கார் என்று நாமும் சேர்க்கிறோம். குழந்தைகளின் ஆசையை நாம் கேட்பதே கிடையாது.
அழகாக இருக்கும் குழந்தைக்கு திருஷ்டி பொட்டு வைக்கிறோம். காருக்கு முன்னாடி எலுமிச்சம் பழத்தை தொங்கவிடுகிறோம். நல்ல செய்தியை கண்பட்டுவிட போகிறது என்று மறைக்கிறோம்.
பணம் செலவு செய்யாமல் அந்தராக்ஷரி விளையாடுகிறோம். பஜனை/ஐய்யப்பா பாடல்களை "கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடி போலாமா" டியுனில் கேட்கிறோம். யாராவது தெருவில் சண்டை போட்டால் நின்று நிதானமாக வேடிக்கை பார்க்கிறோம். செந்தில் கவுண்டமணியிடம் அடி வாங்கும் போது ரசித்து சிரிக்கிறோம்.
எல்லாவற்றையும் ஒரே சமயத்தில் செய்து முடிக்க முயற்சி செய்கிறோம். எல்லா வகை உணவையும் ஒரே பிளேட்டில் தாலி என்று சாப்பிடுகிறோம். ஆக்ஷன், காமெடி, பாட்டு என்று எல்லாவற்றையும் ஒரே படத்தில் பார்த்துக் ரசிக்கிறோம்.
எங்கு சென்றாலும் நாம் நமது அடையாளங்களை விட்டுவிட்டு செல்கிறோம். லிப்ட், பொது கழிப்பிடங்கள் என்று. நம் அடையாளங்கள் இரண்டு - ஒன்று துப்புவது, மற்றொன்று கிறுக்குவது. காந்தியடிகள் ஒரு முறை - நாம் எல்லோரும் சேர்ந்து துப்பினால் இங்லாந்து முழ்கிவிடும் என்றார். ஆனால் இன்றோ எல்லோரும் துப்பினால் பல கண்டங்கள் மூழ்கிவிடும். Dr. பி.ஸ் விவேக் துப்புவதில் ஒரு சின்ன ஒரு ஆராய்ச்சியோ செய்துள்ளார் - மும்பையில் உள்ள 10% மக்கள் துப்பினால் அது வருடத்திற்கு ஐந்து லட்சம் லிட்டர் எச்சில் ஆகிறது. இதை கொண்டு மும்பையை 58 முறை முழ்கடிக்கலாம். சீ.சீ தூ.
பொது இடங்கள், பஸ் சீட்டுக்கு முன், கழிப்பிடங்கள் எல்லாவற்றிலும் "I Love ...." அல்லது, ஆண்-பெண் அசிங்கமான படம், அல்லது அட்லீஸ்டு ஒரு கெட்டவார்த்தை என்று கிறுக்கப்பட்டிருக்கும். காலி இடம் நம் கண்ணை உருத்தும்.
காம்பெவுண்ட் சுவற்றில் பிள்ளையார், காளி, ஏசுநாதர், ஒரு மசூதி என்று வரைந்து வைத்திருப்பார்கள். பக்தியினால் கிடையாதுவீட்டுக்கு வரும் விருந்தாளி நீங்கள் செய்த ஸ்வீட்டை விரும்பி சாப்பிடுகிறார். அவர் வீட்டுக்கு கொஞ்சம் பார்சல் வேண்டும் என்கிறார். நீங்கள் அவருக்கு உங்கள் வீட்டுல் உள்ள விலையுயந்த டப்பர்வேரில் கொடுக்காமல் ஒரு சாதாரன பிளாஸ்டிக் டப்பாவை தேர்ந்தெடுத்து அதில் தான் கொடுப்பீர்கள். நிறைய செய்திருந்தாலும் வீட்டில் வேலை செய்பவருக்கு அடுத்த நாள் அது கெட்டுபோக இருபது செகண்ட் இருக்கும் போது தான் கொடுக்க மனசு வரும்.
சூப்பர் மார்கெட் சென்றால் எக்ஸ்டரா கேரிபேக் எடுத்து வந்து குப்பை தொட்டிக்கு உபயோகிப்பீர்கள். கிப்ட் வந்தால் ஜிகினா பேப்பரை கிழிக்காமல் எடுத்து வைத்துக்கொள்வீர்கள். பக்கத்து வீட்டு மாமி தீபாவளிக்கு கொடுத்த பளவுஸ் பிட்டை எதிர்த்த வீட்டு மாமிக்கு கார்த்திகைக்கு கொடுப்பீர்கள். ஏரோப்பிளேனில் கொடுக்கும் பொருட்களை தவறாமல் வீட்டுக்கு எடுத்து வருவீர்கள். (கொடுத்த காசுக்கு இது கூட எடுக்கவில்லை என்றால் எப்படி என்று சமாதனம் சொல்லிக்கொள்வீர்கள்)
பிளாஸ்டிக் என்றால் நமக்கு தனி மோகம். கார் வாங்கினால் அதன் சீட்டின் மேல் இருக்கும் பிளாஸ்டிக் பேப்பரை பிரிக்கமாட்டோம். மற்றவர்களுக்கு அது புதிய கார் என்று எப்படி நம்பவைப்பது. ஃபிரிட்ஜ் பாக்கிங் காகிதத்தை எடுத்து பத்திரப்படுத்தி அதில் வடாம் காய உபயோகிப்போம். வெளிநாட்டு பொருட்களில் வரும் பிளாஸ்டிக் காகிதத்தை பத்திரபடுத்திவைப்போம். நம் செல் போன்களுக்கு பிளாஸ்டிக் சட்டை போடுவோம்.
என்ன நடிக்கிறார்கள் ? என்ன கதை ? என்ன லாஜிக் ? என்று சினிமாவை குறை கூறிக்கொண்டே பிளாக்கில் டிக்கேட் வாங்கி படம் பார்போம், அல்லது திருட்டு விசிடிக்கு அலைவோம். சீரியல்களை குறைக்கூறிக்கொண்டு, ஆபிஸிலிருந்து லேட்டாக வந்து மனைவி/அம்மாவிடம் சாப்பிடும் போது 'இன்று என்ன நடந்தது" என்று கேட்டு தெரிந்துக்கொள்வோம். வெள்ளிக்கிழமை மனைவி கோவிலுக்கு அழைக்கும் போது தலைவலி என்று சாக்கு சொல்லி, F டிவி பார்ப்போம். டிவியில் வரும் ஆணுரை விளம்பரத்தை பார்த்து முகம் சுளிப்போம். ஆனால் ஷக்கிலாவையும், மும்தாஜையும் நடு இரவில் நினைபோம்.
ஒரு இந்தியன் அட்ஜஸ்ட் என்ற வார்த்தையை ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது சொல்கிறான். இந்த ஆங்கில வார்த்தை தற்போது எல்லா இந்திய மொழிகளிலும் சாதாரணமாக உபயோகிக்கப்படுகிறது. "சொல்ப அட்ஜஸ்ட் மாடி", "தோடா அட்ஜஸ்ட் கரோ", "கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணுங்கோ" போன்ற வார்த்தை நாம் தினமும் கேட்பது. அட்ஜட் என்ற வார்த்தையே நம் எல்லா அகராதியிலும் அட்ஜஸ்ட் செய்து இடம் பெற்றிறுக்கிறது.
பஸ்சில் ஒருவர் காலை மிதித்தால், ஃபுட்போர்டில் தொங்கி பஸ்சிற்குள் செல்லும் போது, தூங்கி பக்கத்து சீட்டில் இருப்பவர் மேல் சாயும் போது, டிரேயினில் உட்கார இடம் கேட்கும் போது, ரசத்தில் உப்பு அதிகமாக இருக்கும் போது, ஹோட்டலில் சாம்பார் இல்லாத போது, பார்கிங்கில் இடம் கிடைக்காமல் பக்கத்தில் இருக்கும் காரின் கண்ணாடியை மடக்கிவிட சொல்லும் போது,
மாமியாரால் சித்திரவதை பட்டு பிறந்த வீட்டுக்கு வரும் பெண்ணுக்கு அம்மா கூறும் அறிவுரை "நீ தான் கொஞ்சம் அவர்களை அட்ஜஸ்ட் பண்ணிக்கணும்'. சினிமா வில்லன் "கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டே உன்னை ராணி போல் வைத்துக்கொள்வேன் இல்லை... " என்று சகட்டுமெனிக்கு நாம் தினமும் அட்ஜஸ்ட் என்ற வார்த்தையை உபயோகிக்கிறோம்.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஜஸ்டிஸ் M.C.ஜெயின் ஒரு முறை கொஞ்சம் கடுப்பாகி "I think I am adjusting too much" என்றார். டைம்ஸ் (செப் 27 பதிப்பில்) இந்திய அதிகாரி ஒருவர் "India would offer to "adjust" the Line of Control by a matter of miles" என்று சொன்னதாக குறிப்பிடபட்டுள்ளது.
குப்பை போடுவதில் நாம் வல்லவர்கள். அதில் பலவிதம். அபார்ட்மெண்டில் வாழ்பவர்கள், குப்பையை விட்டிலிருந்து பால்கனிக்கு எடுத்து செல்வார்கள் பிறகு நியூட்டனின் புவியிற்ப்பு சக்தி மற்றவற்றை பார்த்துக்கொள்ளும். பால்கனியில் தலை வாரும் பெண்கள், சீப்போடு வரும் தலைமயிரை சுருட்டி கீழே போடுவார்கள். அது அடுத்த பால்கனியில் விழும். இது வருடத்தின் 365 நாட்களும் நடக்கும் (இதில் லீப் இயரும் அடங்கும்). காரில் போகும் போது, பிரிட்ஜ் அல்லது மேம்பாலம் வந்தால் சிப்ஸ் பாக்கேட், சாக்கிலேட் பேப்பர் போன்றவற்றை தூக்கி போட நாம் குழந்தைகளை பழக்குகிறோம்.
பப்பு, டிங்கு, குக்கூ, டோலி, டிட்டு, குட்டு, ஜில்லு, கிச்சு, சேச்சு என்ற வார்த்தைகள் அகராதியில் இல்லை ஆனால் அவற்றை தினமும் நாம் உபயோகிக்கும் வார்த்தைகள். குழந்தைகளை கூப்பிடும் பெயர்கள். இது எப்படி ஒரு குழந்தைக்கு வைக்கபடுகிறது என்று யாராவது ஆராயலாம். கிருஷ்ணா - கிச்சாவகவும், சேஷாத்திரி 'சேச்சு'வாதும் எழுதப்படாத விதி.
என்னுடைய பழைய கம்பெனியின் CEOவுடன் ஒரு முறை தாஜ் ஹோட்டலுக்கு லஞ்சுக்கு சென்றிருந்தோம். அப்போது எங்கள் CEOவின் நெருங்கிய நண்பர் அவரை "ஏய் டிங்கு இங்க எப்படி" என்று அவரை அழைத்தார். எங்கள் CEO முகத்தில் ஒரு வேதனை கலந்த புன்னகையை பார்க்க முடிந்தது.
பேரம் பேசுதல் என்பது நம் பிறவி குணம். பெண்கள் இதில் வல்லவர்கள். பூக்காரி, கீரைக்காரி, துணிக்கடை என்று எதையும் விட்டுவைக்கமாட்டார்கள். சில கடைகளில் "Fixed Price" என்று போட்டப்பட்டிருந்தாலும் நாம் பேரம் பேசுவோம். சரவண பவனில் 60 ரூபாய்க்கு ஃபிரைட்ரைஸ் சாப்பிடுவோம், ஆனால் வேளியே பார்க்கிங்கில் இரண்டு ரூபாய்க்கு சண்டை போடுவோம். ஒரு முறை என் நண்பனும் நானும் அமெரிக்காவில் ஒரு கடைக்கு சென்றிருந்தோம். என் நண்பன் ஒரு பொருளை எடுத்து இதை $2 க்கு கொடுக்க முடியுமா என்றான். கடைக்காரர் அந்த பொருளை அவனுக்கு இலவசமாக கொடுத்தார். அது தான் அவன் கடைசியாக பேரம் பேசியது.
நாம் Letter Head வைத்துக் கொள்வதே ரெகமண்டேஷன் எழுதுவதற்குத் தான். பாஸ்போர்ட், ரெயில்வே டிக்கெட், காலேஜில்/ஸ்கூல் சீட், போலிஸ் கேஸ், வேலைக்கு, சாக்கடை அடைப்புக்கு, வண்டி லைசன்ஸ் என்று எல்லாவற்றிருக்கும் இதை உபயோகிக்கிறோம். இந்திய கிரிக்கெட், அரசியல், சினிமா சென்சார் என்று இதில் எதையும் வீட்டுவைக்கவில்லை. ஏன் நம் குழந்தைகளே எதாவது வேண்டுமானல் அம்மவிடம் ரெகமெண்டேஷனுக்கு செல்கிறார்கள்.
டிராபிக் சிக்கினலில் மஞ்சள் கலர் மாறியவுடன், உடனே ஹார்ன் அடித்து முன்னால் இருப்பவருக்கு BPயை ஏற்றுவோம், அவர் திரும்பி பார்த்தால் நாம் வேறு எங்காவது திரும்பிக்கொள்வோம் அல்லது மேலே பறக்கும் காக்காயை ரசிப்போம்.
லேட்டாக வருவது என்பது நமக்கு ஒரு ஃபேஷன். அரசியல் விழாக்களில் தலைவர் லேட்டாகத்தான் வருவார். "இதோ வருகிறார், இதோ வருகிறார்" என்று ஸ்பீக்கரில் அலரிக்கொண்டேயிருக்கும். கல்யாணத்தில் மாப்பிள்ளை வீட்டுக்கார்கள் லேட்டாகதான் வரவேண்டும் அப்போதுதான் அவர்களுக்கு மரியாதை. கவர்மெண்ட் ஆபிஸில் காலை ஒன்பது மணிக்கு போய் எப்ப சார் ஆபிஸரை பார்க்கலாம் என்றால் பியூன் நம்மை ஒரு மாதிரி பார்பார். ஏன் சினிமாவில் கூட போலிஸ் லேட்டாகத்தான் வரும்.
எதையும் போட்டு குழப்பிக்கொள்வோம். ஆகஸ்ட் 15 சுதந்திர தினமா, குடியரசு தினமா?. ஜார்கண்டில் சிபுசோரனா ? சிம்ரனா ?
சினிமாவில் அரசியலும், அரசியலில் சினிமாவையும் போட்டு குழப்பிக்கொள்வோம்.
ஜாதி இருக்க கூடாது என்று சொல்லிக்கொள்வோம். ஆனால் மேட்ரிமோனியலில் ஜாதியின் பெயரை ஸ்பெலிங் மிஸ்டேக் இல்லாமல் கொடுப்போம். யாரையாவது திட்ட வேண்டும் என்றால் ஜாதியின் பெயரை உபயோகிப்போம்.
வெளி வேஷத்திற்கு நிறைய முக்கியத்துவம் கொடுப்போம். நாம் கருப்பாக இருந்தாலும் நமக்கு அமையும் மனைவி சிகப்பாக இருக்க வேண்டும். நன்றாக டிரஸ் செய்து கொள்வோம் ஆனால் உள்ளே கிழிந்த பனியன் போட்டுக்கொள்வோம். வரவேற்பறையில் சுவாமி விவேகானந்தர், ரமண மகரிஷி புத்தகங்கள், டாய்லட்டில் குமுதம் நடுப்பக்கம்.
சமயத்துக்கு தகுந்தார் போல் rulesயை மாற்றிக்கொள்வோம். காலில் போப்பரை மிதித்தால் சரஸ்வதி என்று கண்ணில் ஒற்றிக்கொள்வோம், அமெரிக்கா சென்றவுடன் டாய்லட் போனவுடன் டிஸ்யூ பேப்பரால் துடைத்து போடுவோம். ராத்திரி பத்து மணிக்கு மேல் ஒன்வேயில் போவோம். க்யூக்களை மீறுவோம். ஆர்.டி.ஓ, கார்ப்பரேஷன் அலுவலகத்தில் பணம் கொடுத்து சலுகைகள் வாங்குவோம்.
லஞ்சம் என்பது கடவுளிடமிருந்து ஆரம்பிக்கிறது. பரிட்சையில் பாஸ் செய்தால் தெரு பிள்ளையாருக்கு ஒரு தேங்காய். கொஞ்சம் கடினமான காரியம் என்றால் திருப்பதி வேங்கடாசலபதிக்கு உங்கள் சம்பளத்தில் ஒரு பங்கு கமிஷன் என்று லஞ்சத்தை கடவுளிடமிருந்து ஆரம்பிக்கிறோம். இதை நம் குழந்தைகளுக்கும் சொல்லிக்கொடுக்கிறோம்.
நன்றாக யோசித்துப் பார்த்தால் இது எல்லாம் நாம் கலாச்சார வாழ்வில் நீக்கமற நிறைந்திருக்கின்றன. பிரச்சனைகளை தவிர்ப்பதை விட அதனோடு வாழ்ப் பழகிக் கொள்வது நமக்கு சிக்கலற்றதாகிறது. இந்தியாவில் உள்ள பிரச்சினைகளுக்கு இந்த அட்ஜஸ்ட்மெண்ட் மட்டும் இல்லாவிட்டால் எப்போதோ புரட்சி வந்திருக்கும். விட்டுக் கொடுத்தலும் சமாதான சக வாழ்வும் இந்தியர்களின் தன்மையாகிறது. நாம் ஒவ்வொருவரிடமும் பல நல்ல மற்றும் சில கொல்ல வேண்டிய குணங்கள் இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.
April 2006 May 2006 June 2006 July 2006 April 2007
Subscribe to Posts [Atom]