நான் சமீபத்தில் கவிதா அவர்களின் வலைப்பூவில்
இந்த விஷயத்தை பற்றி பார்த்தேன், அதன் விளைவாக எழுதிய கதை தான் இது.
--------------------------------------------------
பரத் வெளில கிளம்பிட்டான், வீடல இருக்கவே பிடிக்கல. அம்மா அக்க எல்லாரும் கவிதாவை பத்தியே பேசிகிட்டு இருக்காங்க. அடுத்தவங்கள பத்தி பேசுறதுல இவங்களுக்கு என்னதான் சந்தோஷம் இருக்கோ?
பரத் எப்பவுமே தனியா இருக்கணும்னு ஆசப் பட்டா ஊர விட்டு கொஞ்சம் ஒதுங்கி இருக்குற மைதானத்துக்கு போய் தான் உக்காருவான். பெருசா கூட்டம் இருக்காது. சில பசங்க கிரிக்கேட் விளையாடுவாங்க அவ்வளவுதான். எப்பவுமே பரத்துக்கு வீடு விட்டா ஆபீஸ், ஆபீஸ் விட்டா வீடு. அங்க ரெண்டு இடத்துலயும் இல்லன இந்த மைதானத்துல பார்க்கலாம்.
பரத்துக்கு 37 வயசாச்சு. இன்னும் கல்யாணம் ஆகல. அதப் பத்திதான் வீட்ல பிரச்சினையே. பரத் அவங்க வீட்ல கடைசி புள்ள. அவனுக்கு முன்னாடி ரெண்டு அக்கா உண்டு. ரெண்டாவது அக்கா கால் கொஞ்சம் சரி கிடையாது. மூத்த அக்க காலேஜ் போக ஆரம்பிச்சப்போ அவங்க அப்பா தவறிட்டாங்க. அப்பொத்துல இருந்து வீட்டுக்கு ஆண் பிள்ளையா இருந்து, இதோ இப்பொ அவங்க ரெண்டு அக்காவுக்கும் கல்யாணம் முடிச்சு வெச்சுட்டான். அந்த புண்ணியத்துல அவனுக்கு வெளில 1 லட்ச ரூவா கடன் வேற.
இப்போ பிரச்சினை இதுதான். அவங்க அம்ம முந்தாநாள் சாப்பாடு டயத்துல கல்யாணப் பேச்சு எடுத்தாங்க. கவிதாவத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு பரத் தீர்மானமா சொல்லிட்டான். அவங்க அம்மாவுக்கு தாங்கல. உடனே தன் பொண்ணுங்களுக்கு போன் போட்டு வரச் சொல்லிட்டாங்க. காலைல இருந்து வந்து அவங்க பங்குக்கு தொல்லை பண்ணிகிட்டு இருக்காங்க.
கவிதா! இந்த பொண்ண சுத்தி தான் பரத் வீட்ல பிரச்சினையே. நல்ல பொண்ணுதான். பரத் ஆபீஸ்லயே அஸிஸ்டெண்டா வேலை பார்க்குறா. ஆழகுன்னா கவிதா அப்படின்னு சொல்ல முடியாட்டியும் கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்துற அளவுக்கு நல்ல அழகு தான். 33 வயசாச்சு அவளுக்கும். கல்யாணம் பண்ணிக்க அழகு மட்டும் இருந்தா போதுமா? பணம் வேணுமில்லையா? பாவம் கவிதா! சின்ன வயசுலயே அம்மாவ இழந்துட்டா. பெத்தவனும் பொறுப்பில்லாம இன்னொரு கல்யாணம் பண்ணிகிட்டு போய்ட்டான், அப்போல இருந்து அம்மா கூட பிறந்த தங்கை தான் கவிதாவ வளர்த்தாங்க. டிகிரி முடிச்சப்புறம் தன் கால்ல நிக்கணும்னு சொல்லி தனியா வெளில வந்து தங்கி இப்போ வேலை பார்த்துகிட்டு இருக்கா.
இந்த மாதிரி இருக்குற ரெண்டு பேர் லவ் பண்ணது தப்பு இல்லையே!
வீட்டுக்கு கூப்பிட்டு போய் அம்மாகிட்டயும் அறிமுகம் பண்ணி வெச்சுட்டான் பரத். அவங்களுக்கும் கவிதாவ நல்லா பிடிச்சி போச்சு. வாழ்க்கை எந்த பிரச்சினையும் இல்லாம போகுதுனு நினைக்கும் போது தான் அந்த இடி வந்து விழுந்தது.
கவிதாவுக்கு மார்பக புற்றுநோய்.
இந்த பிரச்சினை எப்படி அவளுக்கு வந்தது அப்படின்னு அவளுக்கு இன்னும் தெரியல ஆனா டாக்டர் பார்த்து அதை உறுதிப் படுத்திட்டார். கவிதா படுற கஷ்டத்த பரத்தால பாத்துகிட்டு சும்மா இருக்க முடியல ஆனா டாக்டர் கவிதாவோட ஒரு பக்க மார்பகத்த எடுக்காம இந்த வலிய நிவர்த்தி பண்ண முடியாதுனு சொல்லிட்டார்.
அங்க இங்க பணத்துக்கு ஏற்பாடு பண்ணி ஆபரேஷன் முடிச்சுட்டான் பரத். ஆபரேஷனுக்கு அப்புறம் கவிதா தான் ரொம்ப நொடிஞ்சு போய்ட்டா. கல்யாணத்துக்கு முன்னாடியே இப்படி ஆகிடுச்சே நம்மள பரத் கல்யாணம் பண்ணிப்பாரானு நினைச்சு நினைச்சே அவ பலவீனமாகிட்டே இருந்தா.
பரத் ஆபீஸ் முடிஞ்சு வீட்டுக்கு வந்த போது அவங்க அம்மா வெளில கிளம்பிகிட்டு இருந்தாங்க.
"பரத்! தரகர் ஒரு பொண்ணு ஜாதகம் குடுத்தார். நான் ஜோசியர் கிட்ட போய் பொருத்தம் பார்த்துட்டு வந்துடுறேன்."
"யாருக்கும்மா?"
"நான் என்ன ஊரானுக்கா பொருத்தம் பார்க்க போறேன். உனக்குதாண்டா."
"என்னம்மா விளையாடுறியா! நான் தான் கவிதாவ கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு சொல்லி இருக்கேன்ல"
"அவளுக்கு தான் ஆபரேஷன் பண்ணி எடுக்க கூடாதத எடுத்துட்டாங்களே! இன்னுமா அவள கல்யாணம் பண்ணிக்க ஆசப்படுற?"
"எடுக்க கூடாததயா?? அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லம்மா. போன வருஷம் உனக்கு கூடத்தான் யூட்ரஸ்ல கட்டினு சொல்லி அத எடுத்துட்டாங்க. அதனால் இப்போ என்ன ஆச்சு??"
"நான் அதுக்கு முன்னாடி மூணு புள்ளைங்கள பெத்துட்டேண்டா; ஆனா நீ கவிதாவ கல்யாணம் பண்ணிகிட்டா உன் குடும்ப வாழ்க்கை பாதிக்கும்டா"
"இதனால
எங்க குடும்ப வாழ்க்கை சுத்தமா பாதிக்காது. நீ அதப் பத்தி கவலைப்படாத"
இந்த வாக்குவாதத்தின் முடிவுல தான் அம்மா இப்போ அவ பொண்ணுங்கள கூப்பிட்டு அனுப்பி இருக்கா. ரெண்டு அக்காவும் காலைல வந்தாச்சு. சின்ன அக்கா வந்த உடனே பொரிஞ்சு தள்ள ஆரம்பிச்சுட்டா. பெரியவ இது வரைக்கும் கம்னு தான் இருக்கா, இதுக்கப்புறம் என்ன சொல்லப் போறான்னு தெரியல.
மறுபடியும் இப்ப வீட்டுக்கு போய் உக்காந்த உடனே சின்ன அக்கா ஆரம்பிச்சுட்டா.
"முடிவா இப்போ என்ன தாண்டா சொல்ற?"
"நான் என் முடிவ எப்பவோ சொல்லியாச்சு."
"அவகிட்ட ரொக்கமா ஏதாவது வாங்க போறியா?"
"எதுக்கு? அதுவும் அவகிட்ட ஏது பணம்?"
"என்னடா பேசுற! குறை உள்ள பொண்ண கல்யாணம் பண்ணிக்க போற, பணமும் வாங்க மாட்டேன் அப்படின்ன எப்படி??"
"என்னை என்ன உன் புருஷன் மாதிரின்னு நினைச்சியா? சபைல காசு வேண்டானு சொல்லி, வீட்ல வந்து பைக் வேணும்னு பல் இளிச்சானே"
அவ்வளவுதான் "பாரும்மா என்ன சொல்றான் அவரப் பத்தி"னு அம்மாகிட்ட ஒப்பாரி வைக்க ஆரம்ப்பிச்சுட்டா!
மூத்த அக்கா கிட்ட போய் பரத், "நீ ஏன் சும்மா இருக்க! நீயும் உன் பங்குக்கு திட்டேன்."
அக்கா " டேய், நீ எல்லாத்தையும் யோசிக்கணும்டா. நான் ஒரு நாள் தலைவலிக்குது இன்னைக்கு வேணாம்னு சொன்னாலும் அவர் ஒரு வாரத்துக்கு மூஞ்சிய தூக்கி வெச்சுகிட்டு உக்காந்து இருப்பார்டா. ஆம்பளைங்க எல்லாம் ஒரே மாதிரி தான். சொல்லுடா உனக்கு 37 வயசாச்சு, ஒரு பொண்ண நீ பார்த்த உடனே அல்லது 3 நிமிஷத்துகுள்ள அவ கழுத்துக்கு கீழ உன் கண் போறதில்ல?அவ கட்டிபிடிக்கும் போது கூட உனக்கு ஒரு வெறுமை தெரியும்டா."
"உடம்பு இதத்துக்காக கட்டி பிடிச்சாதாங்கா வெறுமை தெரியும். நான் மனசுக்கு இதம் வேணும்னு சொல்றேன். நீங்க என்ன சொல்றீங்க குறை உள்ளவ கூட நான் என் மீதி நாட்கள கழிக்க கூடாது அவ்வளவுதான"
ஆமாம் என்பது போல் எல்லாரும் பார்த்தாங்க.
"உடம்புல ஒரு பகுதி இழந்துட்டா அப்படின்ன உடனே ஒரு நல்ல பொண்ன குடும்பத்துல ஏத்துக்க மனசில குறை இருக்குற உங்களால முடியாது. உங்க கருத்து படியே நான் இனிமே உங்க கூட இருக்க மாட்டேன். நானும் என் கவிதாவும் தனிய்யா வாழ்ந்துக்குறோம்."
விடு விடு என வெளியே சென்ற பரத்தை பார்த்து என்ன சொல்லி தடுப்பது என தெரியாமல் விழித்தனர் மூவரும்.