மனோ சார்! ஊருக்கு ஒதுக்குப்புறமா இருக்குற பள்ளீக்கூடத்துல கணக்கு வாத்தியார். இன்னும் இவருக்கு கல்யாணம் ஆகலை. ஸ்கூல் ஹாஸ்டல்ல தான் இவர் தங்கி இருந்த்தார். ஞாயிறு மட்டும் மூணு கிலோ மீட்டர் தள்ளி இருக்குற டவுணுக்கு போய் படம் பாத்துட்டு வருவார்.
ஸ்கூல்ல இருந்து டவுணுக்கு போறதுக்கு ஒரு குறுக்கு வழி உண்டு. ஒரு முந்திரி தோப்பு வழியாப் போனா பக்கம். நைட் திரும்பும்போது பஸ் இருக்காது. அதனால கைல எப்பவுமே டார்ச் வெச்சிருப்பார்.
அன்னிக்கும் அப்படித்தான் படம் முடிஞ்சு வர பத்து மணி ஆகிடுச்சு. அந்த தோப்பு வழியாத்தான் வந்துகிட்டு இருந்தார். தூரத்துல ஒரு பையன் ஒரு கல் மேல உக்காந்து அழுதுகிட்டு இருந்தான்.
இந்த நேரத்தில ஹாஸ்டல்ல இருந்து வெளில யாரும் வரக் கூடாதே!
'இங்க என்னடா பண்ணிகிட்டு இருக்க?" பதிலே இல்லை. சுத்திலும் எந்த சத்தமும் இல்லை. ரத்திரி காத்து மட்டும் தான். காத்துல பையன் அழுவுற சத்தம் மட்டும் கேட்டது.
"ஏண்டா அழ்ற?" பக்கத்துல போய் ஆறுதலா கேட்டார். பையன் எதையோ பாத்து பயந்த்துருக்கான். உடம்பெல்லாம் நடுங்கிட்டு இருந்தது.
"ஏய்! எனக்கு கோவம் வந்தா என்ன பண்ணுவேன் தெரியும்ல? பாருடா! நிமிந்து பாருடா என்னை!"
பையன் மெதுவா தலைய நிமித்தினான். சார் டார்ச் லைட்ட அவன் முகத்துல அடிச்சார். அதை ஒரு முகம்னே சொல்ல முடியாது. கண், காது, மூக்கு எதுவுமே இல்லை. மொட்டை தலைய திருப்பி வெச்ச மாதிரி இருந்தது.
இங்க தான் கதை முடியணும்! ஆனா முடியல.
கைல இருந்த டார்ச்ச கீழ போட்டு அலறிகிட்டே ஓட ஆரமிச்சார் மனோ சார்.
ஸ்கூல பாத்து வேகமா ஓடினார். தூரத்துல ஒரு டார்ச் வெளிச்சம் தெரிஞ்சது. வாட்ச் மேனா தான் இருக்கணும். அவன் தான்.
"என்னாச்சு சார்?"
"பயங்கரம்! பயங்கரமா ஒண்ணு பாத்தேன். தோப்புல ஒரு பையன் அழுதுகிட்டு இருந்தான். நம்ம ஸ்கூல் பையனானு பாத்தேன். பாத்தா அவனுக்கு முகமே இல்லை."
"என்ன சொல்றீங்க?"
"ஆமா, மூக்கு, காது, கண்ணு எதுவும் இல்லை."
"இது மாதிரியா?"
சொல்லிடு வாட்ச் மேன் டார்ச் லைட்ட தன் முகத்துல அடிச்சான். மூக்கு, காது, கண், ஏன் புருவம் கூட இல்லை. திடீர்னு டார்ச் லைட் அணைஞ்சது.