முதல் முதலா திவ்யா என் கிளினிக்கிற்கு வரும் போது, "கணவனால் கண்டு கொள்ளப் படாத இன்னொரு பெண்"அப்படின்னு தான் நினைச்சேன். ஆனா அவ கேஸ் கொஞ்சம் வித்தியாசமா எனக்கு பட்டது. அவள எதோ ஒண்ணு ரொம்ப பாதிச்சிருக்கு. அவள அமைதி படுத்துறது பெரிய கஷ்டமான வேலையா இருந்தது.
"பாலா என்னை ஒரு பொருட்டாவே மதிக்குறதில்ல, அவருக்கு எப்பவுமே அவரோட இன்ட்ரெஸ்ட் தான்"
"ஸ்டாக் மார்க்கெட்??"
" இல்ல! அது அவர் வரைக்கும் இருக்க வேண்டியது தான். ஆனா இவர் வெறியா இருக்குறது செஸ் மேல. எப்போ பாத்தாலும் செஸ் செஸ்னு வாழ்க்கய அனுபவிக்க மாட்டேன்றார்"
"புரியலியே!"
"நேத்திக்கு சாயங்காலம் காலாற நடக்கலாம்னு நான் தான் இவர செஸ் போர்ட் முன்னாடி இருந்து இழுத்துட்டு போனேன். அழகான மாலை நேரம், அமைதியான கோவில், பக்கத்துல நான். நியாயமா மனுஷனுக்கு என்ன தோணியிருக்கணும். அத விட்டுட்டு ராணிய தப்பா மூவ் பண்ணதால தோத்துட்டேன் அப்படிங்க்றார்.தட்டுல என்னமோ இருக்கு சாப்பிடணுமேன்னு சாப்பிடுறார்; நடுராத்திரியில கூரைய வெறிச்சு பார்த்துகிட்டு இருக்கார், எனக்கு ரொம்ப பயமா இருக்கு சார்.!"
"ஐயோ! ஆமா பாலா யார்கூட விளையாடுவார், எங்க வெச்சு விளயாடுவார்?"
"ஒரு பொண்ணு வரும் சார் வீட்டுக்கு, அதும் இவர மாதிரி தான் செஸ் பைத்தியம்"
ஆகா!! பிரச்சினைக்கு காரணம் கண்டு பிடிச்சாச்சு! பொறாமை தானா?? அந்த பொண்ண பத்தி இப்பொ கேக்குறது தப்பு. இல்லாத ஒண்ண இவங்களே கற்பன பண்ணி வாழ்க்கைய பாழாக்கிப்பாங்க. திவ்யாவும் அந்த பொண்ண தப்பா நினைக்கல.
"அவங்க ரெண்டு பேரும் என்ன பேசிப்பாங்க?? நல்லா கலகலனு பேசுமா அந்த பொண்ணு."
"நீங்க வேற! ரெண்டு பேரும் சுத்தமா பேசிக்க மாட்டாங்க. மூஞ்சியக் கூட பார்த்துக்க மாட்டாங்க. ஒரு தடவை நான் அவங்களுக்கு டீ கொண்டு போனேன். அப்போ ஒரு வாட்டி தாங்க்ஸ்னு சொன்னாஅவ்ளொதான் நான் அவ வாய்ஸ் கேட்டது."
என்னடா இது இந்த கேஸ் இப்படி குழப்புது.
"சரி திவ்யா! நீங்க ஒண்ணு பண்ணுங்க, அந்த பொண்ண இனி வீட்டு பக்கம் வர விடாம நிப்பாட்டுங்க. செஸ் போர்ட உடைச்சி போடுங்க."
"பண்ணி பார்த்தாச்சு சார்! அவங்க ரெண்டு பேரும் ஃபோன்ல செஸ் விளையாடுறாங்க."
"ஙே!!"
"ஆமா சார்! ஒரு செஸ் போர்ட இமாஜின் பண்ணிகிட்டு. அங்க இருந்து நான் இப்படி பண்ரேன்னு அவ சொல்ல, நான் இப்படி அப்படி பண்ணுவேன்னு இவர் சொல்ல, எனக்கு சந்தேகம் வந்து ஸ்பீக்கர் போன்ல விளயாட சொன்னப்ப தான் எனக்கு தெரிஞ்சது. இந்த மாதிரி விளயாட ரொம்ப கான்ஸென்ட்ரேஷன் வேணும் சார்"
கிழிஞ்சது!!
"நீங்க நாளைக்கு வாங்க மேடம்! நல்ல தீர்வா நான் சொல்றென்."
சும்மா சொல்லிட்டேனே தவிர என்ன பண்ணனு எனக்கு தெரியல. யோசிச்சு பார்த்தப்போ தான் தெரிஞ்சது, அந்த பொண்ண கழட்டி விடணும், அதுக்கு திவ்யாவே விளயாண்டா என்ன? சே இவ்ளோ சின்ன விஷயத்துக்கு இப்படி கஷ்டப்பட்டோமே.
அடுத்த நாள் திவ்யா வந்தப்போ என் டேபிள் மேல ஒரு செஸ் போர்ட். அழகா காயின் அடுக்கு வெச்சிருந்தேன்.
"சார்! என்ன இது??"
"நீங்களே இனி பாலா கூட விளயாடுங்க. அப்போ அவர சுலபமா உங்க வழிக்கு கொண்டு வந்துடலாம்."
"சரி சார் ஆனா எனக்கு அந்த அளவுக்கு விளையாடத் தெரியாதே!!"
"எல்லாம் கத்துக்கலாம். இப்போ ஆரம்பிக்கலாமா?"
விளையாட ஆரம்பித்தது தான் தாமதம் திவ்யாவோட பாடி லாங்வேஜ் சுத்தமா மாறிப் போச்சு. சும்ம நச்னு விளையாண்டாங்க. இந்த அம்மா நல்ல புத்திசாலியா இருக்கணும் , புருஷன்் விளையாடினத பார்த்துட்டு இவ்வளவு அழகா விளையாடுறது கஷ்டம்.
என் காய்கள் ஒண்ணொண்ணா வெளில போய்கிட்டு இருந்தது. எனக்கு என்ன செய்யனு தெரியல. கைய கட்டிகிட்டி உக்காந்துட்டேன்.
"என்னாச்சு இன்னைக்கு, அதுக்குள்ள தோத்துட்டீங்க?"
"என்னாச்சு இன்னைக்கா? நாம இதுக்கு முன்னாடி எங்க விளையாடினோம்?"
நான் கேட்டுகிட்டே இருந்தேன், அவங்க கண்டுக்கவே இல்ல. மெதுவா எனக்கு உரைக்க ஆரம்பிச்சது. அவங்க நான் பாலானு நினைச்சு விளையாண்டுகிட்டு இருக்காங்க. அப்போ அவங்க பாலா கூட விளையாடி இருக்காங்க. அடிக்கடி விளையாடி இருக்காங்க. அதான் இப்போ அவங்க திறமை எல்லாம் காட்டி விளையாடுறாங்க. அப்போ அந்த இன்னொரு பொண்ணு யாரு???
"திவ்யா...திவ்யா. போதும் விளையாடினது. நிறுத்துங்க!!"
அவங்க நான் பேசினத கேக்கவுமில்ல. விளையாட்ட நிறுத்தவுமில்ல.
"திவ்யா" நான் இப்போ கத்தினேன்.
"எங்க எங்க! ஏன் இப்பொ கத்துனீங்க? அவள எங்க?
ஒரு நிமிஷத்துல புத்திசாலியா விளையாடிகிட்டு இருந்த திவ்யா காணாமப் போய், அம்மாகிட்ட அடி வாங்க பயந்துகிட்டு பீரொ பின்னாடி ஒளியுற ஒரு பொண்ண நான் பார்த்தேன்.
"ரிலாக்ஸ்! ரிலாக்ஸ்! இங்க நம்மள தவிர யாரும் இல்ல. யாருக்கு பயந்தீங்க, எதுக்கு பயந்தீங்க??"
"திவ்யாவுக்கு!" பாதி கலங்கிய கண்ணோடு அவள் சொன்னாள்.