html dir="ltr"> நான் பிரசன்னா!!!!!

நான் பிரசன்னா!!!!!

திருவாளர் நல்ல பையன்.

Thursday, April 05, 2007

 

முகம்

மனோ சார்! ஊருக்கு ஒதுக்குப்புறமா இருக்குற பள்ளீக்கூடத்துல கணக்கு வாத்தியார். இன்னும் இவருக்கு கல்யாணம் ஆகலை. ஸ்கூல் ஹாஸ்டல்ல தான் இவர் தங்கி இருந்த்தார். ஞாயிறு மட்டும் மூணு கிலோ மீட்டர் தள்ளி இருக்குற டவுணுக்கு போய் படம் பாத்துட்டு வருவார்.

ஸ்கூல்ல இருந்து டவுணுக்கு போறதுக்கு ஒரு குறுக்கு வழி உண்டு. ஒரு முந்திரி தோப்பு வழியாப் போனா பக்கம். நைட் திரும்பும்போது பஸ் இருக்காது. அதனால கைல எப்பவுமே டார்ச் வெச்சிருப்பார்.

அன்னிக்கும் அப்படித்தான் படம் முடிஞ்சு வர பத்து மணி ஆகிடுச்சு. அந்த தோப்பு வழியாத்தான் வந்துகிட்டு இருந்தார். தூரத்துல ஒரு பையன் ஒரு கல் மேல உக்காந்து அழுதுகிட்டு இருந்தான்.

இந்த நேரத்தில ஹாஸ்டல்ல இருந்து வெளில யாரும் வரக் கூடாதே!

'இங்க என்னடா பண்ணிகிட்டு இருக்க?" பதிலே இல்லை. சுத்திலும் எந்த சத்தமும் இல்லை. ரத்திரி காத்து மட்டும் தான். காத்துல பையன் அழுவுற சத்தம் மட்டும் கேட்டது.

"ஏண்டா அழ்ற?" பக்கத்துல போய் ஆறுதலா கேட்டார். பையன் எதையோ பாத்து பயந்த்துருக்கான். உடம்பெல்லாம் நடுங்கிட்டு இருந்தது.

"ஏய்! எனக்கு கோவம் வந்தா என்ன பண்ணுவேன் தெரியும்ல? பாருடா! நிமிந்து பாருடா என்னை!"

பையன் மெதுவா தலைய நிமித்தினான். சார் டார்ச் லைட்ட அவன் முகத்துல அடிச்சார். அதை ஒரு முகம்னே சொல்ல முடியாது. கண், காது, மூக்கு எதுவுமே இல்லை. மொட்டை தலைய திருப்பி வெச்ச மாதிரி இருந்தது.

இங்க தான் கதை முடியணும்! ஆனா முடியல.

கைல இருந்த டார்ச்ச கீழ போட்டு அலறிகிட்டே ஓட ஆரமிச்சார் மனோ சார்.
ஸ்கூல பாத்து வேகமா ஓடினார். தூரத்துல ஒரு டார்ச் வெளிச்சம் தெரிஞ்சது. வாட்ச் மேனா தான் இருக்கணும். அவன் தான்.

"என்னாச்சு சார்?"

"பயங்கரம்! பயங்கரமா ஒண்ணு பாத்தேன். தோப்புல ஒரு பையன் அழுதுகிட்டு இருந்தான். நம்ம ஸ்கூல் பையனானு பாத்தேன். பாத்தா அவனுக்கு முகமே இல்லை."

"என்ன சொல்றீங்க?"

"ஆமா, மூக்கு, காது, கண்ணு எதுவும் இல்லை."

"இது மாதிரியா?"
சொல்லிடு வாட்ச் மேன் டார்ச் லைட்ட தன் முகத்துல அடிச்சான். மூக்கு, காது, கண், ஏன் புருவம் கூட இல்லை. திடீர்னு டார்ச் லைட் அணைஞ்சது.

Thursday, July 06, 2006

 

ரயில் பயணங்களில்.....

எனக்கு எப்பவுமே ரயில் பயணங்கள் பிடிக்கும். பொதுவா இரண்டாம் வகுப்பு பெட்டில பொறவன் அந்த தடவை கொழுப்பெடுத்து போய், 2ன்ட் ஏ.சி. டிக்கட் எடுத்து இருந்தேன். ஒரு ஆசைதான் எப்படி இருக்கும் அதுல போனா அப்படின்னு. பெருசா கற்பனை பண்ணிட்டு தான் போனேன், ஆனா அங்க ஒண்ணுமேயில்ல.. எனக்கு சப்புனு ஆகிப் போச்சு.
பொதுவா நான் போகும் போது, "தம்பி எனக்கு முட்டி வலி, நீங்க அப்பர் பெர்த் எடுத்துகுறீங்களா??? பெட்டி யாருதுங்க?? சாயா, டீ"
இதெல்லாம் கேட்டு கேட்டு பழகிடுச்சா, இதெல்லாம் இல்லாதப்போ நம்ம ஏதோ தப்பு பண்ணிட்டோம்னே தோணிச்சு.
மத்தபடி நான் யார்கிட்டனாலும் உடனே பேசிடுவேன். 2ன்ட் கிளாஸ், ஸ்லீப்பர் கோச்ல எல்லாம் யாரையும் விட்டதில்ல எல்லார் கிட்டயும் பேசிடுவேன். உடன் டிக்கட்னா இன்னும் குஷிதான். அப்படி இருந்தநான், இந்த ஏ.சி ல வந்து தனியா மாட்டிகிட்டேன். ஜன்னல் பக்கம் ஒரு பெருசு உக்காந்து இருந்தாப்ல. பேசலாம்னு போகும் போதே பெரிய இங்கிலீசு புஸ்தகம் ஒண்ண திறந்து வெச்சுட்டார்.. நான் பாக்காத இங்க்லீஷா?? உடனே அண்ணா நகர்ல பேரம் பேசி 40 ரூவாய்க்கு வாங்கின டிஸ்ப்ஷன் பாயிண்ட் எடுத்து படிக்க ஆரம்பிச்சுட்டேன். அப்பதான் அவன் உள்ளார வந்தான்.
ஆள் பாக்க நீசத்தனமாதன் இருந்ததான். என்ன என்னை விட கொஞ்சம் குள்ளம். பரவாயில்ல விடுங்க.
"ஹாய்"
"ஹாய்"
"நீங்க எங்க திருவனந்தபுரம் போறீங்களா??"
"இல்லைங்க! திருநெல்வேலில இறங்கிடுவேன், நீங்க?"
"எனக்கு திருச்சிதான். சென்னைல ராணா வால்வ்ஸ் இருக்குல்ல அங்கதான் சீனியர் இஞ்சினியரா இருக்கேன். நீங்க?"
"நான் வெட்டிதான்"
"பாத்தா அப்படி தெரியலையே??"
"உங்கள பாத்தா கூட தன் இஞ்சினியர் மாதிரி தெரியலை, நான் எதுனா கேட்டனா?"
"கோவப்படாதீங்க சார்"
"இந்த சார் மோர் எல்லாம் வேணாம், நான் பிரசன்னா"
"நான் கார்த்திகேயன், சுருக்கமா மைக்"
"எப்படியா கார்த்திகேயன சுருக்கினா மைக் வரும்"
"அது நானே எனக்கு வெச்சுகிட்ட பேர்"
நல்லா வைக்குறீங்கடா மைக், ஸ்பீக்கர்னு பேர. கொஞ்ச நேரம் அந்த புக்கையே பாத்துகிட்டு இருந்தேன். ஒரு எழவும் புரியல, வீட்ல போய் அகராதி வெச்சு படிக்கணும்.
"என்னங்க அமைதி ஆகிட்டீங்க, நான் ரொம்ப போர் அடிக்குறேனா"
"இதுக்கு நான் பதிலா உண்மை சொல்லணுமா பொய் சொல்லணுமா?"
"நீங்க பதிலே சொல்ல வேண்டாம், என் வீக்னஸ் அதான் இப்படி எல்லாம் வாங்கி கட்டிக்க வேண்டி இருக்கு.."
"அப்படி என்ன வீக்னஸ்?"
"வேண்டாம் விடுங்க பிரசன்னா"
"இல்ல சொல்லுங்க"
"நான் எப்பவுமே இந்த ட்ரெயின்ல தான் ஊருக்கு போவேன். திருச்சி அப்படிங்குறதால நைட் 2 மணிக்கு ஸ்டேஷன் வரும். சரியா தூங்க முடியாது. ஒரு தடவை இதே மாதிரி தான் யாரும் இல்லாத கம்பார்ட்மெண்ட்ல போய்கிட்டிருந்தேன். பயங்கரமா தூக்கம் வந்தது.. அப்படியே கண்ணசந்துட்டேன். திடீர்னு டப்னு ஒரு சத்தம். என்னடானு பார்த்தா ஜன்னல் கண்ணாடில ஒரு கை, ரெண்டு தடவை தட்டிட்டு அப்புறம் காணாம போயிடுச்சு. யார்றானு வெளிய வந்து பாத்தா..."
"பாத்தா??"
"வண்டி ஆத்து பாலத்துக்கு மேல போய்கிட்டு இருந்தது"
"இது சாத்தியமேயில்லை"
"நானும் அப்படித் தான் நினைச்சேன். ஆனா திரும்ப ஒரு முகம். முகம் முழுக்க ரத்தம் என் முன்னாடி வந்து நின்னு, தண்ணில குதிச்சது"
"என்னயா சொல்ற??"
"ஆமாங்க, அடுத்த ஸ்டேஷன்லயே இறங்கி மாஸ்டர் கிட்ட சொன்னேன். அவர் சொன்னார் யாரோ ஒரு பணக்கார வீட்டு பையன் ரெண்டு வருஷம் முன்னாடி தவறி விழுந்து செத்து போனான், அதுல இருந்து மாசத்துக்கு ஒரு தடவை இப்படி கம்ப்ளைய்ண்ட் வருதுன்னு சொன்னார்."
"இப்ப இதெல்லாம் என்கிட்ட எதுக்கு சொன்னீங்க?"
"சும்மா ஒரு அனுபவ பகிர்தல் தான், பிரசன்னா ஒரு சின்ன ஹெல்ப். திருச்சி வரும்போது என்ன கொஞ்சம் எழுப்பி விட்டுட முடியுமா?? நீங்க புக் படிச்சுகிட்டு இருக்கீங்கல்ல, தூங்கபோறீங்கன்னா என்கிட்ட சொல்லிடுங்க சரியா?"
"சரி மைக், அனேகமா தூங்கிடுவேன்னு தான் நினைக்குறேன்"
"பரவாயில்லை, குட் நைட்"
எங்க தூங்க. ஒரு சின்ன சத்தம் பெரிய சத்தம் கேட்டாலே வயிறு என்னமோ பண்ணுது. பாத்ரூமுக்கு தனியா போகவும் பயமா இருக்கு.. என்ன பண்ண??
இந்த ஏ.சி கோச் கூட பெரிய தொல்லை. ஜன்னல் கண்ணாடி வெச்சிருப்பாங்க. வெளில என்ன இருக்குன்னே தெரியாது. எனக்கு உள்ள பயம் + கடுப்பு. என் பேய் கதை மன்னன் நல்லா குறட்டை விட்டு தூங்கிகிட்டு இருந்தான்.
சரி வெளில போய் நிப்பம், கொஞ்சம் நல்லா இருக்கும்னு போய் வெளில நின்னா... ஆத்து பாலம். ஆத்தாடினு உள்ள வந்துட்டேன். எதுக்கு வம்பு. இவனாவது உயிரோட இருக்கான். நான் எல்லாம் அப்படி பாத்தா ஸ்பாட் அவுட். அவ்வளவு பயந்த சுபாவம்..
ஆத்து பாலம் வந்துடுச்சுல்லா.. அடுத்து திருச்சி தான், பயல எழுப்புவம்.
"மைக்! திருச்சி வரப் போகுது எந்திரிங்க"
"ஆவ்! தாங்க்ஸ்" கொட்டாவி விட்டுகிட்டே சொன்னான்.
"அது சரி, என்ன மாதிரியே எல்லாரும் எழுப்பி விடுவாங்களா என்ன? அடுத்த தடவை, மொபைல் போன்ல ரெண்டு மணிக்கு அலாரம் வெச்சுடுய்யா. பிரச்சினை இல்லாம போகும்ல"
"எனக்கு அலாரம் வைக்குறது சுத்தமா பிடிக்காது.. ஆனா ஒவ்வொரு வாட்டியும் கரெக்டா எழுந்துப்பேன்."
"எப்படி?"
"சும்மா மனசுல வர்ற எதாவது பேய் கதை சொல்லி கூட வர்ற ஆளை பயமுறுத்திடுவேன். அப்புறம் அவன எழுப்ப சொல்லிட்டு தூங்கிடுவேன். அவன் பயத்துல தூங்காம, கடமை உணர்ச்சியோட என்ன எழுப்பி விடுவான். இதுல அவனுக்கு ஒரு டென்ஷன் நமக்கு ஒரு ஆனந்தம். வரட்டா?"
அப்படினு சொல்லி கிளம்பிட்டான்.
நான் ஙேனு முழிச்சிகிட்டிருந்தேன்.

Sunday, July 02, 2006

 

கல்யாணமாம் கல்யாணம்...

நட்சத்திர வாரத்தின் முடிவுல கல்யாணம், நம்ம நிலவு நண்பனுக்கு. நான் ஒண்ணும் புதுசா சொல்றதுக்கில்ல.. நிலவு நண்பன பத்தி..வலைப் பதிவாளர்கள் எல்லாருக்கும் நல்லாவே அவரைத் தெரியும்...ஜூலை ரெண்டாம் தேதி அதாவது இன்னைக்கு அருமையான முறையில் நடந்து முடிந்தது.
சனிக்கிழமை எனக்கு நைட் ஷிப்ட். காலைல வந்து ஞானியார் அனுப்புன மின்னஞ்சல்ல வரவேற்பு தனியா இருக்கானு பார்த்தேன் இல்லை.. சரினு சொல்லி காலைல ஒரு 10 மணிக்கு இருக்குறாப்ல மண்டபத்துக்கு போயிட்டேன். வலை நண்பர்கள சந்திக்குறதுல இருக்குற பிரச்சினை சுவாரஸ்யமானது.. பார்க்குற எல்லாரையும் "இவரா இருக்குமோ?" அப்படின்னே தோணும். அப்படித்தான் நான் மண்டபத்துல துபாய் ராஜா சாரைத் தேடினேன். சார் கண்லயே படலை.
சரி!! எனக்கு ஏற்கனவே அவங்க கல்யாண முறை பழக்கம் அப்படிங்குறதால உள்ள போய் உக்காந்து கிட்டேன். உள்ள போனதுக்கப்புறம் தான் தெரிஞ்சது, நிலவு நண்பனோட தம்பி நெஹ்மத்துல்லா, நம்ம செட்னு.. அவரோட பிரண்ட்ஸ் பல பேரை எனக்கு தெரிஞ்சு இருந்தது.. அதனால மிங்கிள் ஆகுறதுல பிரச்சினை இல்லை.
கல்யாணத்துல சம்பிரதாயங்கள் துவங்குவதற்கு முன்னால, மணமக்களை வாழ்த்தி பேச வந்தாங்க. முதல்ல ஒருத்தர் நல்ல கணீர் குரல்ல பேச ஆரமிச்சார். அவர் சொல்ல சொல்ல தான் நம்ம நிலவு நண்பன இன்னும் நல்லா தெரிஞ்சுக்க முடிஞ்சது. எல்லாரும் அப்படி பாராட்டுறாங்க. சதக் கல்லூரி தமிழ் துறை பேராசிரியர் முதற்கொண்டு வந்து வாழ்த்தினாங்க.. எத்தன பேருக்கு இந்த மாதிரி நடக்கும்? ஞானியாரே! ராசிக்காரர் தான் நீங்க..
அப்புறம் சம்பிரதாயம் எல்லாம் முடிஞ்ச பின்னால வரிசைல நின்னு போய் நான் வாழ்த்தினேன். ஏற்கனவே தொலைபேசில பேசி இருந்ததால பெரிய அறிமுகம் ஒண்ணும் தேவைப் படலை. கல்யாணத்துல உபசரிப்பு ரொம்ப நல்லா இருந்தது.. சைவத்துக்கும் அசைவத்துக்கும் தனி தனி பந்திகள் இருந்தது. நான் எல்லாம் ரெண்டு பிரியாணியும் நல்லா இருக்குதானு பார்த்துட்டேன். சைவ சாப்பாடுல போட்ட கேசரி..டாப் கிளாஸ்..
ஐஸ் வரைக்கும் சாப்பிட்டு முடித்த பிறகு மறுபடி மேடைக்கு போய் பார்த்தேன்..
"என்ன தல!! யாரையும் காணோம், நான் மட்டும் தான் வந்திருக்கேனா?"
"அப்படி எல்லாம் இல்லையே! சிங் ஜெயக்குமார், ப்ரியன், நிலாரசிகன், துபாய் ராஜா, எல்லாரும் வந்திருந்தாங்களே. நாகை சிவா கால் பண்ணி இருந்தார்.கொஞ்சம் சீக்கிரம் வந்து இருந்தீங்கன்னா அறிமுகமாகி இருக்கலாம்."
அய்யோ மூணு பேரையும் பார்க்காம மிஸ் பண்ணிட்டமேனு இருந்தது.. அண்ணிகிட்ட அறிமுகம் என்னை அறிமுகம் பண்ணி வெச்சார் ஞானியார்.. அப்புறம் விடை குடுத்துட்டு வந்துட்டேன். இன்னும் மூணு மாசத்துக்கு இங்க தான இருப்பார் பொறுமையா நம்ம விருந்து குடுத்துக்கலாம்.
இதை துபாய் ராஜா படிப்பார்னு நினைக்குறேன். அவருக்காக..
"என்னங்க போன் நம்பர் எதுக்கு குடுத்தேன்.. கால் பண்ணுங்க தலைவா.. ஊருக்கு போரதுக்கு முன்னாடி பார்க்க வேண்டாமா??"
இது தாங்க நான் இன்னைக்கு உருப்படியா பண்ண காரியம்..
ஞானியும் அண்ணியும் பல வருஷங்கள் இன்னைக்கு இருந்த மாதிரியே சந்தோஷமா இருக்கணும்.
பி.கு. இன்னைக்கு கல்யாணத்துக்கு வந்த எல்லாரும் சொல்லிட்டாங்க. "ஜோடிப் பொருத்தம் பிரமாதம்"னு. சுத்தி போட்டுகுங்க!!!

Friday, June 02, 2006

 

சதுரங்கம்..

முதல் முதலா திவ்யா என் கிளினிக்கிற்கு வரும் போது, "கணவனால் கண்டு கொள்ளப் படாத இன்னொரு பெண்"அப்படின்னு தான் நினைச்சேன். ஆனா அவ கேஸ் கொஞ்சம் வித்தியாசமா எனக்கு பட்டது. அவள எதோ ஒண்ணு ரொம்ப பாதிச்சிருக்கு. அவள அமைதி படுத்துறது பெரிய கஷ்டமான வேலையா இருந்தது.

"பாலா என்னை ஒரு பொருட்டாவே மதிக்குறதில்ல, அவருக்கு எப்பவுமே அவரோட இன்ட்ரெஸ்ட் தான்"

"ஸ்டாக் மார்க்கெட்??"

" இல்ல! அது அவர் வரைக்கும் இருக்க வேண்டியது தான். ஆனா இவர் வெறியா இருக்குறது செஸ் மேல. எப்போ பாத்தாலும் செஸ் செஸ்னு வாழ்க்கய அனுபவிக்க மாட்டேன்றார்"

"புரியலியே!"

"நேத்திக்கு சாயங்காலம் காலாற நடக்கலாம்னு நான் தான் இவர செஸ் போர்ட் முன்னாடி இருந்து இழுத்துட்டு போனேன். அழகான மாலை நேரம், அமைதியான கோவில், பக்கத்துல நான். நியாயமா மனுஷனுக்கு என்ன தோணியிருக்கணும். அத விட்டுட்டு ராணிய தப்பா மூவ் பண்ணதால தோத்துட்டேன் அப்படிங்க்றார்.தட்டுல என்னமோ இருக்கு சாப்பிடணுமேன்னு சாப்பிடுறார்; நடுராத்திரியில கூரைய வெறிச்சு பார்த்துகிட்டு இருக்கார், எனக்கு ரொம்ப பயமா இருக்கு சார்.!"

"ஐயோ! ஆமா பாலா யார்கூட விளையாடுவார், எங்க வெச்சு விளயாடுவார்?"

"ஒரு பொண்ணு வரும் சார் வீட்டுக்கு, அதும் இவர மாதிரி தான் செஸ் பைத்தியம்"

ஆகா!! பிரச்சினைக்கு காரணம் கண்டு பிடிச்சாச்சு! பொறாமை தானா?? அந்த பொண்ண பத்தி இப்பொ கேக்குறது தப்பு. இல்லாத ஒண்ண இவங்களே கற்பன பண்ணி வாழ்க்கைய பாழாக்கிப்பாங்க. திவ்யாவும் அந்த பொண்ண தப்பா நினைக்கல.

"அவங்க ரெண்டு பேரும் என்ன பேசிப்பாங்க?? நல்லா கலகலனு பேசுமா அந்த பொண்ணு."

"நீங்க வேற! ரெண்டு பேரும் சுத்தமா பேசிக்க மாட்டாங்க. மூஞ்சியக் கூட பார்த்துக்க மாட்டாங்க. ஒரு தடவை நான் அவங்களுக்கு டீ கொண்டு போனேன். அப்போ ஒரு வாட்டி தாங்க்ஸ்னு சொன்னாஅவ்ளொதான் நான் அவ வாய்ஸ் கேட்டது."

என்னடா இது இந்த கேஸ் இப்படி குழப்புது.

"சரி திவ்யா! நீங்க ஒண்ணு பண்ணுங்க, அந்த பொண்ண இனி வீட்டு பக்கம் வர விடாம நிப்பாட்டுங்க. செஸ் போர்ட உடைச்சி போடுங்க."

"பண்ணி பார்த்தாச்சு சார்! அவங்க ரெண்டு பேரும் ஃபோன்ல செஸ் விளையாடுறாங்க."

"ஙே!!"

"ஆமா சார்! ஒரு செஸ் போர்ட இமாஜின் பண்ணிகிட்டு. அங்க இருந்து நான் இப்படி பண்ரேன்னு அவ சொல்ல, நான் இப்படி அப்படி பண்ணுவேன்னு இவர் சொல்ல, எனக்கு சந்தேகம் வந்து ஸ்பீக்கர் போன்ல விளயாட சொன்னப்ப தான் எனக்கு தெரிஞ்சது. இந்த மாதிரி விளயாட ரொம்ப கான்ஸென்ட்ரேஷன் வேணும் சார்"

கிழிஞ்சது!!

"நீங்க நாளைக்கு வாங்க மேடம்! நல்ல தீர்வா நான் சொல்றென்."

சும்மா சொல்லிட்டேனே தவிர என்ன பண்ணனு எனக்கு தெரியல. யோசிச்சு பார்த்தப்போ தான் தெரிஞ்சது, அந்த பொண்ண கழட்டி விடணும், அதுக்கு திவ்யாவே விளயாண்டா என்ன? சே இவ்ளோ சின்ன விஷயத்துக்கு இப்படி கஷ்டப்பட்டோமே.

அடுத்த நாள் திவ்யா வந்தப்போ என் டேபிள் மேல ஒரு செஸ் போர்ட். அழகா காயின் அடுக்கு வெச்சிருந்தேன்.

"சார்! என்ன இது??"

"நீங்களே இனி பாலா கூட விளயாடுங்க. அப்போ அவர சுலபமா உங்க வழிக்கு கொண்டு வந்துடலாம்."

"சரி சார் ஆனா எனக்கு அந்த அளவுக்கு விளையாடத் தெரியாதே!!"

"எல்லாம் கத்துக்கலாம். இப்போ ஆரம்பிக்கலாமா?"

விளையாட ஆரம்பித்தது தான் தாமதம் திவ்யாவோட பாடி லாங்வேஜ் சுத்தமா மாறிப் போச்சு. சும்ம நச்னு விளையாண்டாங்க. இந்த அம்மா நல்ல புத்திசாலியா இருக்கணும் , புருஷன்் விளையாடினத பார்த்துட்டு இவ்வளவு அழகா விளையாடுறது கஷ்டம்.
என் காய்கள் ஒண்ணொண்ணா வெளில போய்கிட்டு இருந்தது. எனக்கு என்ன செய்யனு தெரியல. கைய கட்டிகிட்டி உக்காந்துட்டேன்.

"என்னாச்சு இன்னைக்கு, அதுக்குள்ள தோத்துட்டீங்க?"

"என்னாச்சு இன்னைக்கா? நாம இதுக்கு முன்னாடி எங்க விளையாடினோம்?"

நான் கேட்டுகிட்டே இருந்தேன், அவங்க கண்டுக்கவே இல்ல. மெதுவா எனக்கு உரைக்க ஆரம்பிச்சது. அவங்க நான் பாலானு நினைச்சு விளையாண்டுகிட்டு இருக்காங்க. அப்போ அவங்க பாலா கூட விளையாடி இருக்காங்க. அடிக்கடி விளையாடி இருக்காங்க. அதான் இப்போ அவங்க திறமை எல்லாம் காட்டி விளையாடுறாங்க. அப்போ அந்த இன்னொரு பொண்ணு யாரு???

"திவ்யா...திவ்யா. போதும் விளையாடினது. நிறுத்துங்க!!"

அவங்க நான் பேசினத கேக்கவுமில்ல. விளையாட்ட நிறுத்தவுமில்ல.

"திவ்யா" நான் இப்போ கத்தினேன்.

"எங்க எங்க! ஏன் இப்பொ கத்துனீங்க? அவள எங்க?

ஒரு நிமிஷத்துல புத்திசாலியா விளையாடிகிட்டு இருந்த திவ்யா காணாமப் போய், அம்மாகிட்ட அடி வாங்க பயந்துகிட்டு பீரொ பின்னாடி ஒளியுற ஒரு பொண்ண நான் பார்த்தேன்.

"ரிலாக்ஸ்! ரிலாக்ஸ்! இங்க நம்மள தவிர யாரும் இல்ல. யாருக்கு பயந்தீங்க, எதுக்கு பயந்தீங்க??"

"திவ்யாவுக்கு!" பாதி கலங்கிய கண்ணோடு அவள் சொன்னாள்.

Thursday, June 01, 2006

 

பெண்ணாசை பொல்லாதது. பாகம் 4.

நாங்க எங்க செட்ல 5 பேருங்க. நான், எங்க அண்ணன், பாலா, ஐயப்பன், குமார். இதுல இப்போ குமார் போலீஸ் வேலைல இருக்காப்ல. செட்ல முதல்ல பைக் வாங்கினது எங்க அண்ணன் தான். அதனால அவர் பைக் தான் பொதுவானதா இருந்தது. தேவையானப்போ பெட்ரோல் போட்டு யார் வேனும்னாலும் எடுத்துட்டு போயிட்டு வருவம்.
அப்போ தான் ஒரு விஷயமா என்.ஜி.ஓ காலனி போயிருக்கும் போது, நானும் ஐயப்பா அண்ணனும் ஒரு பொண்ண பார்த்தோம், அது என்னடான்ன சரியான லுக். நம்ம ஐயப்பா அண்ணன் இருக்கார்ல அவர் ஸ்டைலே தனி. ரோட்ல ஒரு பொண்ணு தல நிமிந்துறக் கூடாது.ஸ்டைலா காலர தூக்கி விட்டு "தொல்லை தாங்க முடியலப்பா, இந்த பொண்ணுங்க எல்லாம் இப்படி முறைச்சு முறைச்சு பார்க்குதுங்க". அண்ணன் அது கழுத்து வலிக்குதுனு சொல்லி கழுத்த திருப்பி இருக்குனு சொன்னாலும் "அது எப்படி நான் இருக்குற பக்கம் திரும்பலாம்?" அப்படின்னு கேக்குற ஆளு. அப்படிபட்ட ஒரு ஆள இந்த பொண்ணு லுக் விட்டு போயிடுச்சு. நான் ஒருத்தன் நிக்குறேன்னு எண்ணமே இல்லாம வண்டியத் திருப்பி கிட்டு அந்த பொண்ணு பின்னாடி போய்ட்டார்.
போய்ட்டு வந்து "டேய் தம்பி! அண்ணனுக்கு பிக் அப் ஆகிடுச்சுடா!" அப்படின்னார். எனக்கு இன்னும் புரியல எப்படி ஐயப்பா அண்ணனுக்கு மட்டும் எல்லா பொண்ணும் விழுது. சரி விடுங்கப்பா அப்படின்னு வந்தாச்சு. இந்த மேட்டர பாளையங்கோட்டை வந்த உடனே போஸ்டர் அடிக்காத குறையா எல்லார்கிட்டயும் சொல்லியாச்சு. பாலாவுக்கு பொசுங்கல் தாங்கல.
அடுத்து ஒரு வாரம் கழிச்சு, நானும் பாலாவும் படத்துக்கு போகலாம்னு வண்டி எடுத்துட்டு போனோம். அப்ப இதே மாதிரி தான் ஆனா கொஞ்சம் பெரிய பொண்ணு சைக்கிள்ல அதே மாதிரி பாத்துகிட்டே போச்சு.
"நிறுத்து! நிறுத்து வண்டிய நிறுத்து!" பால கத்துனான்.
என்னவோ ஏதோ அப்படின்னு வண்டிய நிப்பாட்டுனா, "அங்க ஒரு பொண்ணு நம்மள பார்த்துகிட்டே போச்சு. என்னானு போய் விசாரிக்கலாமா?"
"எது? நம்மளயா? அது எப்படி?"
"அப்படி இல்லா, நீ வண்டி ஓட்டுன, உன் முகம் அவளுக்கு தெரிஞ்சிருக்க வாய்பில்லை. ஆனா அவ திரும்பி பார்த்துகிட்டே போனா, அதுக்காக அவ என்னதான் பார்த்தானு நான் சொல்ல வரல!"
"நிறுத்து, அந்த பொண்ணுகிட்ட போய் இப்ப என்ன பேசப் போற?"
"ஐயப்பனுக்கு ஒரு உமா கிடைச்ச மாதிரி நமக்கு ஒரு ரமா கிடைக்க மாட்டாளா?"
"இப்பவே சொல்லிட்டேன்! நீதான் பேசணும் எனக்கு அந்த பொண்ணுகிட்ட ஒண்ணும் கிடையாது"
"நீ அவள நிப்பாட்டு மத்ததெல்லாம் நான் பாத்துக்குறேன்."
அவன் பேச்ச நான் நம்புவனா! எல்லாம் விதி.
எங்க போறான்னு பாத்து, அவள போய் நிப்பாட்டினேன். பயங்கரமா திரு திருனு முழிச்சா.
பாலா பின்னால இருந்து ஸ்டைலா இறங்கினான், என்னதான் பேசப் போறான் அப்படின்னு நான் பார்க்குறப்பவே, என்ன பாத்து "மாப்ளே! ஏதோ சொல்லணும்னு சொன்னியே சொல்லிடு"
"அட சுந்தர பாண்டியா கவுத்துட்டியே"னு மனசுக்குள்ள நினைச்சுகிட்டு, பழைய்ய்ய்ய்ய்ய்ய டெக்னிக் ஒண்ணு யூஸ் பண்ணேன்.
"நீங்க பூர்ணிமா தான?"
"இல்ல என் பேர் சிவசங்கரி"
ஆகா இந்த பொண்ணு பிரச்சினை பண்ணாதுனு ஒரு நம்பிக்கை வந்தது. அப்புறம் அவ எங்க படிக்குறா என்ன ஏதுன்னு கேட்டு வெச்சிகிட்டோம். பிரபலமான கல்லூரி என்பதால் பேர் குறிப்பிடவில்லை. "நான் தினமும் இந்த வழியா தான் கம்ப்யூட்டர் கிளாஸ் போவேன்" அப்படின்னு ஒரு கூடுதல் தகவல் வேற.
"சரி! கிளம்புறோம்" அப்படின்னு கிளம்பினா, "வெரி நைஸ் மீட்டிங் யூ" அப்படின்னு கை குடுத்தா. அதுவரைக்கும் சீன்லயே வராத நம்ம பாலா பாய்ஞ்சு கைய பிடிச்சுட்டான். அன்னைக்கு அவன் போட்ட ஆட்டம் இருக்கே, தாங்க முடியலடா.
இதுல ஒரு மேட்டர் சொல்லியாகணும். சும்மா சுடிதார் போட்டு ஒரு பொம்மைய நிக்க வெச்சா கூட நான் விடமாட்டேன். ஆனா ஏன்னே தெரியல அந்த பொண்ணும் மேல எனக்கு ஒண்ணும் தோணல.
அடுத்த நாளைக்கு கரெக்டா அவ கம்ப்யூட்டர் கிளாஸ் போறேன்னு சொன்ன நேரத்துக்கு நம்ம பய ஆஜர். அந்த பொண்ணும் கிராஸ் பண்ணி போச்சு. ஆனா நம்ம பயல கண்டுக்கல.. அவ்வளவு தான்.
ஒரு அரைமணி நேரம் கழிச்சு நான் போனேன். சபைல* நின்னுகிட்டு இருந்தான். என்னடா அந்தப் பொண்ண பாத்தியான்னு தான் கேட்டேன்.
"சும்மா இரு மாப்ளே! அந்த பொண்ணு ஒண்ணும் நல்ல பொண்ணு மாதிரி தெரியல,எல்லாவன் கிட்டயும் பேசுது, சிரிக்குது எனக்கு அது வேண்டாம். நீ வேணும்னா போ."
"எது? டேய் சும்மா இருந்தவன வண்டிய திருப்ப சொல்லி, இப்ப இப்படி பேசுறியா? அங்க அப்படியே நிப்பாட்டிக்க, இனிமே ஃபாலோ பண்ணு அப்படி இப்படினு எதுனா பேசுன, உங்கய்யா கிட்ட சொல்லிடுவேன்"
இது எல்லாத்தையும் அன்னைக்கு சபைக்கு புதுசா வந்து இருந்த ஒரு பையன் கேட்டுகிட்டு இருந்தான். அவன் பேரு மணி.கராத்தே பிளாக் பெல்ட்.
"பாஸு"
"என்ன?"
"எனக்கு அந்த பிள்ளைய காமிக்கியளா?"
இவன் பொதுவா இப்படி பேசுற ஆள் கிடையாது. அதாவது நல்ல பையன்னு நினைக்க வேண்டாம், தைரியம் பத்தாது. அதனால நான் முன்னாடியே சொல்லிட்டேன். தூரத்துல இருந்து தான் காமிப்பேன், அப்படியே போய் பிக் அப் பண்ணிக்கணும். சரியா?
எல்லாத்துக்கும் மண்டைய மண்டைய ஆட்டிட்டு, கரெக்டா நூற்றாண்டு மண்டபம் முன்னாடி நின்னுகிட்டான். பய வரட்டும்னு நானும் இருட்டுல காத்து கிடந்தேன்.
அந்த பொண்ணும் சைக்கிள்ல வந்தா. தைரியமா கை காட்டி நிப்பாட்டிட்டான்.
"பேஷ்! பாலாவுக்கு இவன் பரவாயில்லை"
அடுத்து அவன் வெச்சான் பாருங்க அணுகுண்டு,
"என் நண்பன் உன்கிட்ட பேச ஆசை படுறாப்ல, அங்க நிக்குறான் பாருங்க"
இதுக்கு அவனே பரவாயில்லையேடா..
அந்த பொண்ண சொல்லியும் தப்பில்லை, ரெண்டாவது வாட்டி நான் வழியுறேன், "நீங்க பேசணும்னா நீங்களே நிக்க சொல்லலாமே, யாரோன்னு நினைச்சு போயிருப்பேன், உங்க வண்டிய பாத்து தான் நின்னேன்."
"அடிப் பாதகத்தி!!" மனசுக்குள்ள நினைச்சுகிட்டேன்.
"இல்ல சும்மாத்தான், ஆங், இது என் நண்பன் மணி." இவன கோத்து விட்டு நம்ம தப்பிச்சுகலாம்னு பார்த்தேன்
அவன் ஒரு பெரிய ஜென்டில் மேன் ரேஞ்சுக்கு தலைய லைட்டா ஒருதரம் ஆட்டிட்டு வேற பக்கம் திரும்பிகிட்டான்.
சம்பந்தமில்லாம ஏதோ பேசிட்டு, அவள அனுப்பிட்டு இவன்கிட்ட வந்தேன்.
"ஸாரி பாஸ்! பிள்ள பக்கத்துல வந்த உடனே என்ன பண்ணனு தெரியாம பதட்டத்துல இப்படி பண்ணிட்டேன்."
"என்னவோ! இனி என்ன இதுல இழுக்காத"
"அப்படி சொல்லாதீங்க, நான் அந்த பிள்ளைய சீரியஸா லவ் பண்றேன்."
"எது? இது எப்பலேர்ந்து?"
"இப்பத்தான்! பாத்த உடனே பிடிச்சு போச்சு"
அதெப்பிடிடா உங்களுக்கு மட்டும்.. சரி விடு.
"நான் என்ன பண்ணனும் அதுக்கு.?"
"ஒண்ணும் பண்ண வேண்டாம் தலைவா. என் கூட வந்தால் போதும்."
"என் வரலாறு எல்லாம் தெரிஞ்சா நீ இப்படி பேச மாட்ட!" (இன்னொரு பதிவு)
"என்னவோ விடுங்க நாளைக்கு சாயங்காலம் ஒரு 5.30க்கு சபைக்கு வந்திடுங்க பேசிக்கலாம்"
அடுத்த நாள் நான் வேணும்னே லேட்டா போனேன். அங்க பாத்தா நம்ம பாலா, மணி எல்லாம் உக்காந்திருந்தாங்க. அதுல நம்ம மணிக்கு காது கீதெல்லாம் கிழிஞ்சு ரத்தம். எங்கயோ வண்டில விழுந்திருப்பான்
"வாடா, எங்க போன! உன்னால பாரு பல்லி கில்லெல்லாம் உடைஞ்சிருக்கு!"
"நிறுத்து, இவன் வண்டில விழுந்ததுக்கெல்லாம் நான் எப்படி பொறுப்பு?"
"வண்டில விழுந்தானா, ஹிஹி, சிவசங்கரி ஆள போட்டு அடிச்சிட்டு வந்திருக்கான்."
"என்னது அவளுக்கு ஆள் இருக்கா?"
"நான் தான் சொன்னேன்ல மாப்ளே, அவ எவனப் பாத்தாலும் இளிக்கா, "
"மேல ஒண்ணும் பேசாத, தெரியாதவங்கள பத்தி பேசுறது தப்பு, அதிலயும் பொட்ட பிள்ளைகள பத்து நம்ம ஊர்ல பேசுறது ரொம்ப தப்பு."
இப்ப தான் மணி வந்தான்.
"ஸாரி பாஸ்"
"பரவாயில்ல, என்ன ஆச்சு?"
"நீங்க வர லேட்டாயிட்டா, அதான் நான் அப்படியே நடந்து போகலாம்னு போனேன். நேத்து நாம அந்த பொண்ணு கூட பேசின எடத்துல இன்னொருத்தன் நின்னு பேசிகிட்டு இருந்தான். அதான் எனக்கு கோவம் வந்திட்டு அடிச்சுபுட்டேன்."
கொஞ்ச நேரம் நிறுத்திட்டு, "சாரி பாஸ்"னான் மறுபடி.
"இது எதுக்கு?"
"இல்ல அவன அடிச்சு முடிச்சப்புறம், டேய் உன்ன யார் அனுப்புனான்னு எனக்கு தெரியும், அவன்கிட்ட போய் சொல்லி அவன் என்ன கலரா இருந்தாலும், அழகா இருந்தாலும் அவன்கிட்ட வரமாட்டேன்னு அப்படின்னு அந்த பொண்ணு சொல்லிச்சு"
"என்னடா சொல்ற"
"இன்னொரு விஷயம்"
"இன்னொண்ணா?"
"அந்த அடிபட்ட பய, புதுப்பேட்டை தெரு. பாத்து இருந்துக்குங்க, நான் வரேன்."
"டேய் அந்த பொண்ண லவ் பண்றேன்னு சொன்ன நேத்திக்கு"
"அந்த பொண்ணு தான் இன்னொருத்தன லவ் பண்ணுதே, நாம ஒரு லவ் பேர்ட்ஸ பிரிக்க கூடாது."
இவன் என் வாழ்க்கைல மட்டும் விளையாடலாமா? என்ன கொடுமை இது. புதுப்பேட்டை தெரு மோசமான தெருவாச்சே. செட் சேந்தா கும்மி எடுத்துருவாங்களே. இவனுக்கு போய் நான் உதவி பண்ணுவனா? இன்னைக்கு வரைக்கும் அந்த மரண பயத்துலயே வாழ்ந்துகிட்டு இருக்கேன். அதனால தான் சொல்றேன், உங்க பெண்ணாசை மட்டும் இல்லை, உங்கள சுத்தி இருக்குறவன் பெண்ணாசையும் பொல்லாதது..
-----------------
சபை- இது நாங்க எல்லாம் கூடுற எடம். பெருசா சரித்திரமெல்லாம் இல்லை. நேர் மாடில ஒரு டியூஷன் உண்டு. அதுல ஒரு 3 பொண்ணுங்கள ரூட் விட்டோம். அதுகல மிஸ் பண்ணக் கூடாதேன்னு அங்க நின்னு நின்னு அது கூடுமிடம் ஆகிப் போச்சு. திருநெல்வேலி காரங்களுக்கு தெரியும். தெற்கு பஜார் சரஸ்வது ஸ்டோருக்கு எதுத்தால நிப்பம்.

 

இரண்டு நிமிடங்கள்...

திங்கட்கிழமை!! திங்கட்கிழமைனாலே தன்னால அலுப்பு வருது. ஆனா என்ன செய்ய, ஆபீஸ் கிளம்பணுமே. ரொம்ப நேரம் தூங்கின மாதிரி இருக்கே. மணி பார்த்தா 8.30. ஏன் இந்த அமுதா என்ன இன்னும் எழுப்பல?? சும்மா 7.30க்கே கிடந்து குதிப்பாளே?
கிச்சன்லயும் ஆளக் காணோம். எங்க போயிருப்பா?? வீடே அமைதியா இருக்கு.
நேரம் ஆக ஆக எனக்கு கடுப்பு தாங்க முடியல. காலைல இருந்து ஒரு காபி இல்ல, பேப்பர் எடுத்துக் குடுக்கல, அட இதெல்லம் வேணாம்பா, குட் மார்னிங்க் சொல்ல கூட யாரும் இல்லயே!! சரி பேப்பர் இருக்கானு ரேக் ல பார்த்தா, இன்னைக்கு பேப்பரும் இல்லை. கதவ திறந்து வெளில பார்த்தா, ஒரு வாரம் முந்தின பேப்பர்ல இருந்து இன்னைக்கு பேப்பர் வரைக்கும் இருக்கு. என்ன ஆச்சு இந்த பேப்பர் பையனுக்கு??
இப்பொ தான் எனக்கு லைட்டா ஒரு பயம் வர ஆரம்பிச்சது. என் செல் எடுத்து அமுதா நம்பர டயல் பண்ணேன். ரிங் போய்கிட்டே இருந்தது, அவ எடுக்கவே மாட்டேங்குறா!! எங்க போனாளோ? சரி மறுபடியும் ட்ரை பண்ணா வாய்ஸ் மெயில் போச்சு, அதுல அவளுக்கு மெஸேஜ் குடுத்துட்டு, ஃப்ரிட்ஜ் ல இருந்த பிரட் சாப்பிட்டு கிளம்பிட்டேன், நான் என் வேலய பார்க்கலேன்னா என் வேலை புஸ்ஸ்!! மனசுக்குள்ள சங்கடமாதான் இருக்கு. இருந்தாலும் அவளும் ஒரு பட்டதாரி, எங்கயாவது அவசர வேலயா போயிருக்கலாம். கால் பண்ணுவா. ஹ்ம்ம்ம்

வீட்ட விட்டு வெளில வந்து பைக்க ஸ்டார்ட் பண்ணி கிளம்பினேன். என்ன எல்லாம் நல்லாதான் இருக்கு ஆனா என்னால ஒரு மனுஷனையும் பார்க்க முடியல. கடை இருக்கு, பஸ் இருக்கு. ஆனா எதிலயும் ஆட்கள் இல்ல. என்னடா இது?? ஆச்சர்யமா இருக்கே. இது கனவா நினைவானே எனக்கு தெரியல. உடனே திரும்ப வீட்டுக்கு வண்டிய திருப்பிட்டேன். வீட்டுக்குள்ள போகும்போதே ஃபோன் அடிச்சுகிட்டு இருந்தது. அவசர அவசரமா உள்ள போகுறதுக்குள்ள, ரிங் நின்னு போச்சு.

காலர் ஐ.டி ல நம்பர பார்த்தா அது பாலா. பாலா என் சொந்தக் காரன். இப்போ மதுரைல இருக்கான். நான் திரும்ப கால் பண்ண ரிங் போய்கிட்டே இருக்கு எடுக்க மாட்டெங்குறான். என்னது இது???
சரி விடுங்கடானு நேரா ஆபீஸுக்கே வண்டிய விட்டேன். எப்பவும் நிக்குற மாதிரி காரே இல்ல. எனக்கு ஷாக் பழகி போச்சு. உள்ள போனா யாரும் ஆபீஸ்ல இல்ல. நான் மட்டும் தான். சொல்லப் போனா நானே 1 அவர் லேட். ஃபோன் அடிச்சுகிட்டே இருக்கு. இதுக்கு மேல ஆபீஸ்ல இருந்த எனக்கு பைத்தியம் பிடிச்சிடும்னு சொல்லி வெளில வந்துட்டேன்.

இப்போ என்ன பண்ணலாம். மனுஷன் இருக்குற அடையாளமே இல்லை. எதிரி நாடு அணுகுண்டு போடுறேன்னு மிரட்டி எல்லாரயும் வெளியூருக்கு அனுப்பிட்டானா?? இப்போ என்ன செய்யலாம். ரைட் நமக்கு கால் பண்ண ஒரே ஆள் நம்ம பாலா தான்.மதுரை இங்க இருந்து 150 கிலோ மீட்டர் தானே. கிளம்பிப் போய் பார்த்துட்டு வந்திடலாம்னு பைக்க ஸ்டார்ட் பண்ணி ஓட்ட ஆரம்பிச்சேன்.

சரியா கயத்தாறு தாண்டின உடனே ஒரு லாரி கண்ணுல பட்டது.ஆகா நம்ம இன்னைக்கு காலைல இருந்து பார்த்ததுல மூவிங் ல பார்த்தது இது ஒண்ணு தான். சரி நிப்பாட்டி எங்க இருந்து வருது? அந்த ஊர் நிலவரம் எப்படினு கேக்கலாம்னு வண்டிய ஓரமா நிப்பாட்டிட்டு ரோட்ல வந்து கைய காமிச்சேன். பரதேசிப் பய!! வண்டியா ஓட்டுறான். நேரா என்ன வந்து தூக்கிட்டான். அம்மா!! உடம்பெல்லாம் வலிக்குதே. இப்பொ வீட்டுக்கு போனா போதும். மெதுவா கிளம்புவோமா.

வீட்டுக்கு போனா என்ன யாரும் கண்டுக்கவே மாட்டேங்குறாங்க!! நான் ஒருத்தன் இருக்குறதயே யாரும் கண்டுக்கல, அவங்க அவங்க வேலய பார்த்துகிட்டு இருக்காங்க. என்ன வீட்டு முன்னாடி ஒரே கூட்டம். ஆங்! அங்க அமுதா உக்காந்து அழுதுகிட்டிருக்காளே!! என்ன ஆச்சுனு தெரியலியே?? என்ன பாரு் அமுதா. என்கிட்ட பேசேன்.

"அமுதா" சத்தம் கேட்டு திரும்பி பார்த்தா பக்கத்து வீட்டு மாமி.
"வாங்க மாமி! நீங்களாவது என்னனு கேளுங்க!"
சுத்தம். அவங்களும் என்ன கண்டுக்கவே இல்ல. என்னடா ஆச்சு உங்களுகெல்லாம். சரி மாமி பக்கத்துல உக்காந்துக்கலாம்னு உக்காந்து அவங்க பேசுறத கேட்டுகிட்டு இருந்தேன்.
"எப்படி அமுதா ஆச்சு??"

"என்னத்த சொல்றது மாமி! இவர் ஒரு வருஷமா பக்கவாதம் வந்து படுத்த படுக்கையா இருக்கார். நாந்தான் இவருக்கு எல்லாம் பார்த்துகிட்டு இருந்தேன். திடீர்னாப்புல இன்னைக்கு காலைல எதோ கனவு கண்டவர் மாதிரி அமுதா இந்த மெஸேஜ் கிடைச்சதும் எனக்கு கால் பண்ணு அப்படின்னார். எனக்கு என்ன செய்யன்னே புரியல. அவர அப்படியே எடுத்து என் மடில போட்டுகிட்டேன். என்னென்னவோ புலம்பினார். கடைசியில ஏதோ பெரியா பஸ் மோதின மாதிரி முகத்தில வலி காமிச்சார். அப்புறம் அவ்ளொதான் மாமி. எல்லாம் முடிஞ்சு போயிடுச்சு! என்ன அனாதயா விட்டுட்டு போயிட்டாரே"
எல்லாம் கேட்டுகிட்டு இருந்த நான் இப்பொ "ஙே" முழிச்சுகிட்டு இருக்கேன்.

Sunday, May 28, 2006

 

பெண்ணாசை துரத்துதே!!!

நான் போன செவ்வாய் காலைல தான் சென்னைல இருந்து, திருநெல்வேலி திரும்பி வந்தேன். வந்த உடனே அம்மா "டேய்! நம்ம கல்லிடைகுறிச்சி மாமாவுக்கு உடம்பு சரி இல்லடா, சுதர்ஸன் ஆஸ்பத்திரில சேத்திருக்காங்க. நிலமை கொஞ்சம் மோசம் தான். கொஞ்சம் போய் பார்த்துட்டு வர்றியா?"
எங்க கல்லிடைகுறிச்சி மாமாவ எனக்கு ரொம்ப பிடிக்கும். பாசாங்கு இல்லாத மனுஷன். அதுக்கு மேல என் மேல ரொம்ப பிரியம் வெச்சிருந்த நல்லவர். அவருக்கு ஒரு பையன், ஒரு பொண்ணு. சொந்தம் என்னவா இருந்தாலும், வயசுக்கு மூத்தவங்கள அண்ணன், அக்கா அப்படின்னு கூப்பிட்டே பழக்கம் ஆகிடுச்சு.
மாமாவ ஐ.சி.யூல வெச்சு இருந்தாங்க. அந்த ஆஸ்பத்திரில என்ன கூத்துன்னா, பேஷன்ட், ஐ.சி.யூல இருந்தா கூட வந்தவங்க தங்க ரூம் கிடையாது. வெளில தான் தங்கணும். அதுவும் போக அந்த இடத்துல கட்டுமான பணிகள் நடந்து கொண்டு இருந்ததால ஒரே மண்ணும், சிமெண்டும் மேல விழுந்துட்டு இருந்தது. மதியம் ஒரு 12 மணிக்கு என்னையும் அவங்க கணவரையும் உக்கார சொல்லிட்டு, எங்க அக்கா குளிக்க பக்கத்துல உள்ள ஃபிரண்ட் வீட்டுக்கு போய்ட்டாங்க.
ராத்திரி உடன் டிக்கட்ல வந்ததால கண்ணெல்லாம் பயங்கர எரிச்சல்.
"அத்தான்! நான் படுத்துக்குறேன், எதுனா வேணும்னா எழுப்புங்க" அப்படின்னு சொல்லிட்டு சாய்ஞ்சுட்டேன்.
அவர் நமக்கு பக்கத்துலயே கொஞ்ச நேரம் கழிச்சு சாய்ஞ்சுட்டார். வெளில தான் படுக்க வேண்டி இருந்ததால நல்ல உறக்கம் எல்லாம் இல்ல. திடீர்னு முன்னால மெடிக்கல் கவுண்டர்ல ஒரு பொண்ணு நிக்குறா. என்னாடா தெரிஞ்ச முகமா இருக்கேனு பாத்தா, ஷர்மிளா
பக்கத்துல நம்ம அத்தான், செம தூக்கம். சரி இங்க தான போய் என்னனு கேட்டு வந்திடலாம்னு போனேன்.
"ஷர்மிளா?"
"நீங்க எங்க இங்க?" ஆச்சரியமா என்ன பார்த்து கேட்டா.
"எங்க மாமா அட்மிட் ஆகி இருக்காங்க, நீங்க என்ன இங்க?"
"அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக்!" சொல்லும் போதே கண்ல தண்ணி.
"ஐயய்யோ! இப்ப எப்படி இருக்கு?"
"ஐ.சி.யூல இருந்து வெளில வந்துட்டாங்க, ஆனாலும் ரொம்ப கஷ்டப்படுறாங்க."
அதுக்குள்ள அவங்க பில் வந்துட்டதால, கிளம்பிட்டாங்க.
திரும்பி பாத்தா, எங்க அத்தான், மந்தகாச புன்னகையோட "என்ன தம்பி! கேர்ள் பிரண்டா?"
"சேசே! அதெல்லாம் இல்ல அத்தான். இந்த பொண்ணுக்கு நான் தான் போன வருஷம் பிராஜக்ட் பண்ணி குடுத்தேன். அப்பவே இவங்க அப்பாவ நல்லா தெரியும். அதான் என்ன ஆச்சுன்னு கேட்டுகிட்டு இருந்தேன். வேற ஒண்ணுமில்லை."
"அப்படியா! என்னவோ நேத்திக்கு நைட் பூரா ஜெபம் பண்ணிகிட்டு இருந்தாங்க. ரொம்ப கஷ்டம் தான்."
சரினு கேட்டுகிட்டேன். அடுத்த நாள்ல இருந்த நான் வேலைக்கு போகணும், காலைல மட்டும் தான் இருக்க முடியும். சாயங்காலம் ஆஸ்பத்திரிக்கு வந்து, காலைல குடுத்த டிபன் பாத்திரங்கள வாங்கிட்டு போகணும். இது தான் எனக்கு குடுக்கப் பட்ட வேலை. ஷர்மிளா இருக்க வேற என்ன வேணும் சந்தோஷமா ஏத்துகிட்டேன்.
வந்த உடனே அக்கா சொல்லிட்டாங்க "பிரஸ்! சார்ஜர் கொண்டு வரல, உன் சார்ஜர் சாயங்காலம் வரும்போது கொண்டு வந்துடு"
"சரிக்கா"
அடுத்த நாள் ஷர்மிளாவ நான் பார்க்கவே இல்லை. அதுக்கடுத்த நாள் காலைல அம்மா ஆஸ்பத்திரிக்கு டிபன் கொண்டு போய்ட்டு அங்க இருந்து நேரா வேலைக்கு போக சொல்லிட்டாங்க. பொதுவா ஆஸ்பத்திரினாலே போர் அடிக்கும், அதனால டான் பிரவுண் டாவின்ஸி கோட் புஸ்தகத்த எடுத்துகிட்டு போனேன்.
அன்னைக்கு பாத்து, மாமாவ ஜெனரல் ரூமுக்கு கொண்டு வந்துட்டாங்க. உடனே அவர ஸ்கேன் பண்ணனும்னு சொல்லி கூப்ட்டு போய்ட்டாங்க, கூட அக்காவும் போக வேண்டியதா போச்சு. இப்ப ஆஸ்பத்திரில உக்காந்து எல்லா பொருளையும் தேவுடு காக்க நம்மள விட்டு போய்ட்டாங்க.
"அக்கா!" நு ஒரு குரல் திடீர்னு
ஆஹா இந்த குரல எங்கேயோ கேட்டிருக்கோமே, அப்படினு நினைச்சுகிட்டே கதவை திறந்தா, ஷர்மிளா!!!
"ஆனந்தி அக்கா இல்ல?"
"எங்க அக்கா தான் ஆமா உங்களுக்கு எப்படி எங்க அக்காவ தெரியும்?"
"அப்பா ஐ.சி.யூல இருக்கும்போது, நாங்க ரெண்டு பேரும் தான் வராண்டாவுல உக்காந்திருப்போம்."
"அப்படியா? சரி ரொம்ப நாளா காண்டாக்டே இல்லையே, ஒரு கால் பண்ணி இருக்க கூடாதா?"
"இல்ல பிரச்சினை வேண்டாம்னு விட்டுட்டேன்."
எனக்கு முகத்துல அடிச்சா மாதிரி ஆகிடுச்சு, இவகிட்ட என்னத்த போட்டு பேசிகிட்டுனு
"என்ன விஷயமா இப்ப வந்தீங்க?"
"செல்போன் சார்ஜர் வேணும்!"
"எப்பவுமே உங்களுக்கு உதவிகிட்டே இருக்கணும்னு எனகு விதிச்சிருக்கு போல இருக்கு, என் சார்ஜர் தான் எடுத்துகிட்டு போங்க"
"இல்ல பரவாயில்ல, என் தங்க வீட்டுக்கு போய் எடுத்துகிட்டு வருவா"
"என் சார்ஜர் யூஸ் பண்ண உங்க சித்தப்பா கோவிப்பாரா என்ன?
"அப்படியெல்லாம் இல்ல, சரி தங்கை வந்ததும் குடுத்து அனுப்புறேன்."
எனக்கு நான் பண்றது சரியா தப்பானு தெரியல ஆனா இந்த ஒரு 'நட்பு' தொடரணும்னு ரொம்ப விரும்பினேன்.
தினமும் இந்த மாதிரி சின்ன சின்ன இடக்குகள், புன்னகைகள் எல்லாம் கிடைச்சுகிட்டே இருந்தது, நானும் ரசிச்சுகிட்டே இருந்தேன்.
எங்க மாமாவ டிஸ்சார்ஜ் பண்ற நாள் வந்தது,
சாதாரணமா, அவங்க முன்னாடி போற மாதிரி போய் நின்னுகிட்டு,
"சரிங்க, எங்க மாமாவ வேலூர் சி.எம்.சில காட்ட சொல்லிட்டாங்க. இன்னைக்கு சாயங்காலம் டிஸ்சார்ஜ். அப்பாவுக்கு என்ன சொல்றாங்க?"
"ஒண்ணும் சொல்ல மாட்டேன்றாங்க, அதான் பிரச்சினையே, இப்பவே முப்பத்தஞ்சு வரைக்கும் போயிடுச்சு."
"நான் கண்டிப்பா கடவுள வேண்டிக்குறேங்க! அப்ப வரட்டுமா?"
"மறுபடியும் நம்ம பார்க்கவே முடியாதா?"
"இல்ல! அப்படி சொல்ல முடியாது, இப்ப பாருங்க, இந்த ஆஸ்பத்திரில இந்த சூழ்நிலைல நாம சந்திப்போம்னு எதிர்பார்த்தமா என்ன?"
"நாம கடைசியா அந்த ஹோட்டல்ல பேசினது எனக்கு இன்னும் நியாபகம் இருக்கு"
"எனக்கும் அத மறக்க முடியாது, உங்க தங்கச்சி ஒரு விஷயம் சொன்னாங்க..."
"என்ன சொன்னா?"
"உங்களுக்கும் என்ன பிடிச்சிருந்ததுன்னு.."
உடனே முகத்த வேற பக்கம் திருப்பிகிட்டு, ஒரு நிமிஷம் கழிச்சு
"இப்பவும் சொல்றேன், எனக்கு உங்கள பிடிக்கும், ஆனா நீங்க எந்த தப்பான முடிவுக்கும் வர வேண்டாம்"
"என்னங்க நீங்க, என்ன பிடிச்சிருக்குனு சொல்லி இருக்கீங்க, நான் என்ன தப்பா எடுத்துக்க போறேன்."
"இல்ல, நான் சும்மா சிரிச்சதுக்கே, வீட்டுக்கு கால் பண்ணி எனக்கு நல்லா பூசை வாங்கி குடுத்தீங்க, இப்ப இப்படி சொன்னத்துக்கப்புறம் என்ன செய்வீங்களோ?"
"அன்னைக்கு சித்தப்பா ரொம்ப அடிச்சுட்டாங்களா?"
"பச்! ஆமா, ஆனா எனக்கு வலிக்கல."
"ஏன்?"
"நீங்க எனக்கு பேச முயற்சி பண்ணி இருக்கீங்க அப்படிங்குறதே எனக்கு ரொம்ப சந்தோஷம்..சரி அம்மா ரூம்ல தனியா இருப்பாங்க. நான் வரட்டுமா.. உங்க நம்பர் இன்னும் என்கிட்ட இருக்கு. I will surely call you someday..bye"
இப்ப இந்த பொண்ணு என்ன சொல்ல வருது. வீட்ல அடி விழுது பேசாத அப்படின்னா, இல்லை நீ கால் பண்றது எனக்கு பிடிச்சிருக்குன்னா?
ஒரு மண்ணும் புரியல, என்னமோ போங்க!!

Saturday, May 27, 2006

 

சென்னை தமிழ் டீன்ஸ்..


என்னடா இது சென்னை தமிழ் டீன்ஸ்னு கலவையா ஒரு தலிப்பு இருக்கேனு பார்க்குறீங்களா? அதை பத்தி தான் நான் இப்ப சொல்ல வரேன். சென்னை தமிழ் டீன்ஸ், என் வாழ்வில் முக்கியமான ஒரு அங்கம்.
போன வருஷம் நான் ஒரு இன்டர்னெட் சென்டர்ல வேலை பாத்தது உங்களுக்கு எல்லாம் தெரியும்னு நினைக்கிறேன். அப்போ எனக்கு அறிமுகமானதுதான் ஹைஃபை.காம்.
நிறைய பேருக்கு இந்த சைட் பத்தி தெரிஞ்சிருக்கலாம். அதுல எனக்கு கிடைத்த அருமையான தங்கை தான் சிந்துஜா. எல்லாருக்கும் முன்னாடியே சொல்லி இருக்கேன். சிந்துஜா எனக்கு சிபாரிசு பண்ண குழுமம் தான் இது. இதுக்கான சுட்டி.
முதல்ல ரொம்ப சாதாரணமா யார்கிட்டயும் ஒட்டாம கொள்ளாம நாம பாட்டுக்கு போனமா ஃபார்வர்ட் வந்த மெயில அங்க ஒட்டினோமா வந்தோமானு இருந்தேன். ஆனா அதுக்கான இடம் அது கிடையாதுனு கொஞ்சம் லேட்டா புரிஞ்சுகிட்டேன். யாருமே அங்க என்ன மாதிரி வெட்டி கிடையாது. நல்லா படிச்சு வேலையில இருக்குற, படிச்சுகிட்டு இருக்குற பசங்க இருக்குற குழுமம். கொஞ்ச கொஞ்சமா அந்த குழு மக்கள் அவங்க பக்கம் என்ன இழுக்கா ஆரம்பிச்சாங்க.
போகப் போக எங்க குழுமத்துல தேவை இல்லாத விஷயங்கள் குறைந்து எங்கள் சொந்த விஷயங்களை பகிர்ந்து கொள்ள ஆரம்பிச்சோம். அருமையான ஒரு நட்பு வட்டத்துல நான் இருக்கேன்.
"அதெல்லாம் சரிடா தம்பி அதப் பத்தி இப்ப ஏன் புலம்புற?"னு தான கேக்குறீங்க.
எங்க குழுமத்தோட மூணாவது சந்திப்பு இந்த மாதம் 21ம் தேதி நடந்தது. நானும், என் நண்பன் பாலாவும் 19ம் தேதியே அங்க இருந்தோம். எங்க குழுமத்தை துவக்கி பெரிய நட்பு வட்டத்துக்கு எங்களை இழுத்த நண்பர் மைக் எங்களுக்காக ரயில் நிலையத்தில் காத்திருந்தார். அவருடன் அவரது ரூமில் தங்குவதாகத்தான் ஏற்பாடு. அன்று அவரது பிறந்த நாள் ஆகிவிட்டபடியால் மாலை அண்ணாநகர் காஃபி டேயில் பார்ட்டி நடந்தது.
நான், பாலா, என் அண்ணன், சிடிடி (சென்னை தமிழ் டீன்ஸ்) உறுப்பினர் குரு, என் தங்கை சிந்து எல்லாரும் கலந்து கொண்டோம், வழக்கமான விசாரிப்புகள், பரிசளிப்புகள் எல்லாம் முடிந்த பிறகு, சாப்பிட துவங்கினோம். என்னத்த காஃபி டே, ஒரு மண்ணும் நல்லா இல்லை. இதுல நான் வேற சுவத்துல மாட்டி இருந்த படத்த பார்த்து, அது வேணும்னு கேட்டு, அது வாயில வைக்க சகிக்கல.

அன்னைக்கு பொழுது ஒரு வழியா நைட் 11 மணிக்கு முடிஞ்சுது. அதுக்கப்புறம் சில சொந்த வேலைகள் காரணமாக (ஹிஹி நீங்க நினைக்குறது சரிதான்) நானும் பாலாவும் மட்டும் தனியாக வெளியில் சென்றோம்.

அயனாவரம் அபிராமி மெகா மாலில் பொழுத்தை கழித்து, இரவு 11 மணிக்கு ரூமுக்கு திரும்பி படுத்தாச்சு. அடுத்த நாள் காலை பத்து மணிக்கு சென்னை தமிழ் டீன்ஸ் 3ஆவது சந்திப்பு. எல்லாரும் காலை பத்து மணிக்கு காந்தி மண்டபத்தில் சந்திப்பதாக திட்டம். வழக்கம் போல சொதப்பிட்டானுங்க. ஷேர் ஆட்டோல போகும் போதே கால் வந்தது, "பிரஸ், நாங்க சில்ரன்ஸ் பார்க்ல இருக்கோம் வந்துடுடா."
சரினு சொல்லி அங்க போனா எல்லாரும் வந்து இருந்தாங்க. அங்க காலைல எல்லாம் பேசி முடிச்சுட்டு, மத்தியானம் பெசன்ட் நகர் பொன்னுசாமி மெஸ்ல ஒரு புடி புடிச்சுட்டு, சாயங்காலம் பூரா கடற்கரைல விளையாடினது எல்லாம் காலா காலத்துக்கும் ஞாபகம் இருக்கும்.
எனக்கும் இந்த இணைய நட்பு மேல முதல்ல நம்பிக்கை கிடையாது. அதை பொய்யாக்கி இந்த குரூப் அருமையான இணைய நண்பர்களை எனக்கு குடுத்திருக்கிறது.
மேல நான் குடுத்திருக்குற லிங்க் பயன்படுத்தி நீங்களும் எங்க கூட சேர்ந்துக்கலாம், உங்களுக்கு விருப்பம் இருந்தா, உங்களுக்காக ஒரு புதிய, அழகான, உபயோகமான, உங்கள் துக்கங்களில் தோள் குடுக்க, உங்க்ளோடு சேர்ந்து சந்தோஷத்தில் குதிக்க ஒரு பத்து நண்பர்கள் காத்துகிட்டு இருக்கோம்.
நான் என்னோட பயண கட்டுரை மாதிரி தான் எழுதணும்னு நினைச்சேன், ஆனா இது எப்படி எல்லாமோ போயிடுச்சு. அடுத்த சந்திப்பு செப்டம்பர்/அக்டோபர் மாதங்களில் இருக்கும்.
அதுக்குள்ள நீங்க உள்ள புகுந்து எல்லாரோடவும் கலந்துகிட்டீங்கன்னா, ஃப்ன்னுக்கு நான் கேரண்டி.

Archives

April 2006   May 2006   June 2006   July 2006   April 2007  

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]